
நெல்லை மாவட்டம் பழவூர் புதிய காலனியை சேர்ந்தவர் மனுவேல். இவரது மகன் மது(வயது 34). இவர் பழவூரை அடுத்த கே.சி. பழவூரில் தனது வீடு அமைந்துள்ள தெருவில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும்படையினருக்கு தகவல் கிடைத்தது.
உடனே பறக்கும்படை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது மது வீடு வீடாக சென்று பணம் கொடுத்து கொண்டு இருந்தார். அவரை அதிகாரிகள் பிடித்து சென்று பழவூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அதில் ஊராட்சி மன்ற தலைவி பதவிக்கு போட்டியிடும் ஒருவருக்கு ஆதரவாக மது பணம் கொடுத்தது தெரியவந்தது.
அவரது கையில் ஒரு பேப்பரில் எந்தெந்த தெருக்களில் எத்தனை ஓட்டுகள் என்று எழுதி வைத்திருந்தார். அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது சட்டை பையில் வைத்திருந்த ரூ.38 ஆயிரத்து 700-ம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.