search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    கிடப்பில் உள்ள மின்திட்டங்களை நிறைவேற்றினால் மின்வாரியம் லாபத்தில் இயங்கும் - ராமதாஸ் யோசனை

    2014-19 காலத்தில் மராட்டியமும், குஜராத்தும் தங்களின் அனல் மின்னுற்பத்தித் திறனை முறையே 10,842 மெகாவாட், 6,927 மெகா வாட் ஆக அதிகரித்துக் கொண்டுள்ளன என ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆந்திராவைச் சேர்ந்த மின் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மின்சாரத்தை விலை குறைத்து வாங்கியதன் மூலம் மிச்சப்படுத்திய ரூ.126 கோடியை நுகர்வோருக்கு திருப்பி அளிக்க முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன.

    இந்தியாவில் மின் நிறுவனங்கள் ஒரு தொகையை மிச்சப்படுத்தி, அதை வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது இதுவே முதல் முறையாகும்.

    ஆந்திர அரசுக்கு சொந்தமான மின் வினியோக நிறுவனங்கள் தான் இந்தியாவில் சிறப்பாக செயல்படும் மின் நிறுவனங்கள் ஆகும். கடந்த 3 மாதங்களில் ரூ.126 கோடியை மிச்சப்படுத்திய ஆந்திர மின் நிறுவனங்கள், அதற்கு முந்தைய இரு ஆண்டுகளில் ரூ.2,342 கோடியை மிச்சப்படுத்தி உள்ளன.

    ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.4.55க்கு கொள்முதல் செய்யலாம் என ஆந்திர அரசு அனுமதித்துள்ள நிலையில், அம்மாநில மின் வினியோக நிறுவனங்கள் ரூ.3.12க்கு கொள்முதல் செய்கின்றன. இது தான் இந்தியாவில் வெளிச்சந்தையில் மின்சாரத்திற்கு வழங்கப்படும் மிகக்குறைந்த விலையாகும்.

    தமிழ்நாடு மின்வாரியம் சராசரியாக ஒரு யூனிட் ரூ. 5.02 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்குகிறது. சில தருணங்களில் அதிக பட்சமாக ரூ.7.00 வரை ஒரு யூனிட் மின்சாரம் வாங்கப்பட்டிருக்கிறது.

    சொந்தமாக மின்சாரம் தயாரிக்கும் போது அதை விட குறைந்த செலவே ஆகும். ஆனால், தமிழ்நாட்டின் ஓட்டுமொத்த தேவையான 16,000 மெகாவாட்டில் சுமார் 2800 மெகாவாட் அனல் மின்சாரம் மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மீதம் உள்ளவற்றில் மரபு சாரா ஆதாரங்களில் இருந்து பெறப்படும் மின்சாரம் தவிர, மத்திய அரசு நிறுவனங்களில் இருந்து சுமார் 5,000 மெகா வாட் அளவுக்கும், தனியாரிடமிருந்து 5000 மெகாவாட் வரையிலும் கொள்முதல் செய்யப்படுகிறது.

    தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த அனல் மின் உற்பத்தித் திறனே 4320 மெகாவாட் மட்டும் தான். இதிலும் கூட 2520 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 12 அலகுகள் 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டவை என்பதால் அவை கைவிடப் பட வேண்டும். அத்தகைய சூழலில் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிலிருந்து வாங்க வேண்டிய மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும்.

    அதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் அனல் மின் நிலையங்கள் அதிக அளவில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் 1800 மெகாவாட் அனல் மின்னுற்பத்தி நிலையங்கள் மட்டும் தான் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன.

    கோப்புபடம்

    ஆனால், 2014-19 காலத்தில் மராட்டியமும், குஜராத்தும் தங்களின் அனல் மின்னுற்பத்தித் திறனை முறையே 10,842 மெகாவாட், 6,927 மெகா வாட் ஆக அதிகரித்துக் கொண்டுள்ளன. தமிழகம் மிகவும் பின்தங்கிக் கிடக்கிறது.

    தமிழ்நாட்டில் 17,340 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்திட்டங்கள் உருவாக்கப்பட்டு 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.

    இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால் மின்சார வாரியம் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் நிலையை மாற்றி, குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலை உருவாகும். அதன் மூலம் வாரியத்தை லாபத்தில் இயக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×