search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    மதுவிலக்கை தீர்மானிக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்க வேண்டும்- ராமதாஸ்

    கிராமப்பகுதிகளில் மதுக்கடைகள் வேண்டாம் என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், உடனடியாக கிராமசபைகளைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மகாராஷ்டிர மாநிலத்தில் ‘1949-ம் ஆண்டின் பம்பாய் மதுவிலக்கு சட்டத்தின்’படி மது விற்பனை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, ஏதேனும் ஒரு நகர வார்டிலோ அல்லது கிராமத்திலோ மதுக்கடைகள் தேவையில்லை என அங்குள்ள பெண்களில் 25 சதவீதம் பேர் மனு அளித்தால் அதனடிப்படையில் அங்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்.

    நகரப்பகுதிகளாக இருந்தால் வட்ட அளவிலும், ஊரகப் பகுதிகளாக இருந்தால் கிராம அளவிலும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும். அதில் பங்கேற்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மதுக்கடைகளுக்கு எதிராக வாக்களித்தால், உடனடியாக அங்குள்ள மதுக்கடைகள் மூடப்படும். அதுமட்டுமின்றி, அந்த பகுதியில் மதுக்கடைகளை மீண்டும் திறக்க முடியாது.

    இதேபோன்ற நடைமுறையை தமிழகத்திலும் கொண்டு வரவேண்டும் என 12 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். இந்த யோசனையை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. மதுக்கடைகளை மூட ஆணையிட வலியுறுத்தி தொடரப்பட்ட பொதுநலவழக்கில் 2019-ம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘‘மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்து விட்டது. இனிவரும் தலைமுறைகளையாவது காப்பாற்ற வேண்டும்.

    மதுக்கடைகளுக்கு எதிராக கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை மதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் அறிவுறுத்தினர். மக்களின் கருத்துகள் மீதும், உயர்நீதிமன்றத்தின் மீதும் மரியாதை வைத்துள்ள தமிழ்நாடு அரசு இந்த யோசனையையும் மதித்து செயல்படுத்த முன்வர வேண்டும்.

    மதுக்கடை

    மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் போதெல்லாம், அதை முனை மழுங்கச் செய்வதற்காக அரசுத் தரப்பில் செய்யப்படும் பிரச்சாரம்,‘‘ மதுக்கடைகளை மூடி விட்டால் நலத் திட்டங்களுக்கான நிதி எங்கிருந்து வரும்?’’ என்பது தான். அது மிகவும் தவறு. மதுவைக் கொடுத்து குடும்பங்களைச் சீரழித்து விட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்குவதால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படாது.

    அதுமட்டுமின்றி, மதுக்கடைகளை மூடினால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கான மாற்றுத் திட்டங்களை பா.ம.க. தெரிவித்திருக்கிறது.

    இந்த வி‌ஷயத்தில் தொடர்ந்து ஆக்கப்பூர்வ ஆலோசனை வழங்க பா.ம.க. தயாராக உள்ளது. இவற்றையெல்லாம் கடந்து மக்களாட்சியில் மக்களின் விருப்பமே முக்கியமாகும். எனவே, கிராமப்பகுதிகளில் மதுக்கடைகள் வேண்டாம் என்று குறிப்பிட்ட அளவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், உடனடியாக கிராமசபைகளைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×