search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பலமுறை மருந்து தெளித்தும் பலனில்லை - படைப்புழு தாக்குதலால் மக்காச்சோள சாகுபடி பாதிப்பு

    செடிகளின் வளர்ச்சி தருணத்திலேயே பெரும்பாலான பகுதிகளில் படைப்புழு தாக்குதல் துவங்கியுள்ளது.
    குடிமங்கலம்:
     
    பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசன நிலங்கள், அமராவதி புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள், இறவை மற்றும் மானாவாரி பாசன நிலங்களில் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவ மழை இயல்பை விட அதிகரித்ததோடு மக்காச்சோளம் விலை உயர்ந்து குவிண்டால் ரூ.2 ஆயிரம் வரை விற்று வருவதால் மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். 

    இதனால் நடப்பு பருவத்தில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பரப்பு அதிகரித்தது. மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டு செடிகள் வளர்ச்சி பருவத்தில் உள்ளது. 

    செடிகளின் வளர்ச்சி தருணத்திலேயே பெரும்பாலான பகுதிகளில் படைப்புழு தாக்குதல் துவங்கியுள்ளது. செடி, இலை, குருத்து என புழுக்கள் துவம்சம் செய்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- கடந்த சில ஆண்டுகளாக படைப்புழு தாக்குதலால் மக்காச்சோள சாகுபடி முற்றிலுமாக சேதமடைந்து வருகிறது. 

    இதனால் உடுமலை பகுதிகளில் சாகுபடி குறைந்து  காய்கறி உள்ளிட்ட மாற்றுப்பயிர் சாகுபடிக்கு சென்றனர். ஆனால் விளைபொருட்கள் விலை வீழ்ச்சி, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களினால் தற்போது மக்காச்சோளம் சாகுபடிக்கு திரும்பியுள்ளனர்.

    வேளாண் துறை, கோடை உழவு, வேப்பம்புண்ணாக்கு இடுதல் என பல வழிமுறைகளை தெரிவித்தும் பயனில்லை. துவக்க பருவத்திலேயே அதிக பாதிப்பு உள்ளதால் பல முறை பூச்சிக்கொல்லி மருந்துகளை அடிக்க வேண்டியுள்ளது. பயிரின் வளர்ச்சி தருணத்திலேயே மூன்று கட்டமாக மருந்து தெளிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

    எனவே மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள பகுதிகளில் வேளாண் துறை ஆய்வு செய்து ஒட்டுமொத்த மருந்து தெளிக்கும் மானிய திட்டம், தொழில் நுட்ப உதவிகள் என கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு பொருளாதார சேத நிலையை தாண்டிய பயிர்களுக்கு அரசிடமிருந்து நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்றனர். 
    Next Story
    ×