search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிபாளையம் 4 வழி சந்திப்பு சாலையில் மழை வெள்ளம் ஆறாக ஓடும் காட்சி.
    X
    பள்ளிபாளையம் 4 வழி சந்திப்பு சாலையில் மழை வெள்ளம் ஆறாக ஓடும் காட்சி.

    திருச்செங்கோட்டில் 5 வீடுகள் இடிந்து விழுந்தன- பள்ளிபாளையத்தில் போக்குவரத்து துண்டிப்பு

    பள்ளிபாளையம், பாலம் சாலை, ஒன்பதாம்படி, கண்டிபுதூர், பேரூர் திடல் வீதி மற்றும் அன்னை சத்யா நகர், வசந்த நகர் சுற்றுப்புறத்தில் உள்ள ஏராளமான குடியிருப்பில் தண்ணீர் புகுந்தது.
    நாமக்கல்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 30 மி.மீ., ஓமலூர்- 27, மேட்டூர்- 17.4, எடப்பாடி-7, ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம்-5, ஆத்தூர் -2.2, ஆனைமடுவு, காடையாம்பட்டி, தம்மம்பட்டி பகுதிகளில் 2 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென கனமழை பெய்தது. இந்த மழை இடைவிடாமல் காலை 6 மணி வரை நீடித்தது. இதனால் வயல்வெளிகள், விவசாய தோட்டங்கள், தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    திருச்செங்கோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியில் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதில் 5-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மழை தண்ணீர் அப்பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இதேபோல் கூட்டப்பள்ளி காலனி ஏரி பகுதிக்கு செல்லும் வழிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தன. முன்னெச்சரிக்கையாக அந்த பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

    பொதுமக்களும், அரசு ஊழியர்களும் முகாமிட்டு தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்று மழை பெய்து 40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    பள்ளிபாளையம், பாலம் சாலை, ஒன்பதாம்படி, கண்டிபுதூர், பேரூர் திடல் வீதி மற்றும் அன்னை சத்யா நகர், வசந்த நகர் சுற்றுப்புறத்தில் உள்ள ஏராளமான குடியிருப்பில் தண்ணீர் புகுந்தது.

    பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி நான்கு சாலை சந்திப்பு வழியாக 3 அடி உயரத்தில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் வாகனங்கள், பஸ்கள் செல்ல முடியவில்லை. சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடுவதால் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    சேலத்தில் இருந்து பள்ளிபாளையம் ஈரோடுக்கு 30-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மழை வெள்ளம் காரணமாக பள்ளிபாளையம் பஸ் நிலையம் தற்காலிமாக மூடப்பட்டது.

    இதையடுத்து சேலத்தில் இருந்து பள்ளிபாளையம் பஸ் நிலையம் வழியாக ஈரோடு மாவட்டத்திற்கு செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதையான பவானி வழியாக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மழைநீர் குறைந்தபிறகு இந்த வழியாக மீண்டும் பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் கூறியதாவது:-

    கனமழை காரணமாக சூரியம்பாளையம், கூட்டப்பள்ளி பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. வருவாய்துறையினரும், நகராட்சி துறையினரும், மழை தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தண்ணீர் செல்லும் வழிகளில் உள்ள அடைப்புகள் சரி செய்து தண்ணீர் ஓரளவு வடிந்து கொண்டிருக்கிறது.

    51 மி.மீட்டர் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் உள்ள 10 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×