search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பொள்ளாச்சி அருகே பழங்குடியின தம்பதியின் 4 மாத பெண் குழந்தை கடத்தல்

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பழங்குடியின தம்பதியின் 4 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொள்ளாச்சி:

    கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது36). இவரது மனைவி சங்கீதா.

    இவர்களுக்கு அம்மு என்ற 4 மாத பெண் குழந்தை உள்பட 4 குழந்தைகள் உள்ளனர்.

    பழங்குடியின தம்பதியினரான இவர்கள் குடும்பத்துடன் பழைய துணிகள் மற்றும் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். அடிக்கடி வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று குடும்பத்துடன் தங்கி இந்த தொழிலை செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் மைசூருவில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு வந்தார். நேராக ஆனைமலை பகுதிக்கு சென்ற அவர், அந்த பகுதியில் நீண்ட நாட்களாக பயன்பாடு இல்லாமல் கிடக்கும் பஸ் நிலையத்தில் தங்கினார்.

    பின்னர் அவர்கள் சுற்றுவட்டார பகுதி முழுவதும் சென்று பழைய பொருட்களை சேகரித்து அதனை விற்று வந்தனர்.

    நேற்று மணிகண்டன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வேலையை முடித்து விட்டு, இரவு மீண்டும் தாங்கள் தங்கியிருக்க கூடிய பஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    அப்போது சங்கீதா தனது கணவரிடம் வெளியில் செல்வதாக கூறி விட்டு, 4 மாத பெண் குழந்தையுடன் பஸ் நிலையத்தை விட்டு வெளியில் வந்த அவர், அந்த பகுதியில் உள்ள சில்லி சிக்கன் கடை அருகே நின்றிருந்தார்.

    இதனை அந்த பகுதியில் வெகுநேரமாக சுற்றி திரிந்த நபர் ஒருவர் பார்த்தார். அவர் நேரடியாக, சங்கீதாவின் அருகே வந்து, ஏன் இங்கு தனியாக குழந்தையுடன் நிற்கிறாய்? ஏதாவது காசு வேண்டுமா? என கேட்டுள்ளார். அவரும் காசு கேட்கவே, அந்த நபரும் 50 ரூபாயை எடுத்து சங்கீதாவிடம் கொடுத்தார்.

    பின்னர் நீ வேண்டும் என்றால் கடைக்கு சென்று சில்லி சிக்கன் வாங்கி கொண்டு வா. அதுவரைக்கும் நான் உனது குழந்தையை பார்த்து கொள்கிறேன் என கூறினார். அவரும் குழந்தையை அந்த நபரிடம் கொடுத்து விட்டு கடைக்கு சென்றார்.

    சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்த நபரையும், குழந்தையையும் காணவில்லை. தன்னை ஏமாற்றி குழந்தையை கடத்தி சென்று விட்டதை அறிந்த சங்கீதா அதிர்ச்சியடைந்து ஓடி சென்று தனது கணவரிடம் தகவலை தெரிவித்தார். 2 பேரும் சேர்ந்து அந்த பகுதி முழுவதும் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து ஆனைமலை போலீசில் மணிகண்டன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்த போலீசார் அங்குள்ள கடைக்காரர்கள், குழந்தையின் பெற்றோரிடமும் விசாரித்தனர்.

    அப்போது பெற்றோர், நேற்றுமுன்தினம் ஒருவர் வந்து எங்களிடம் குழந்தையை விற்பனைக்கு கேட்டார். ஆனால் நாங்கள் தரமாட்டோம் என மறுத்து அவரை அனுப்பி விட்டோம். இந்த நிலையில் தான் எங்கள் குழந்தை மாயமாகி விட்டது. எனவே அந்த நபர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் அந்த கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களையும் பார்வையிட்டு அதில் யாராவது குழந்தையை தூக்கி செல்லும் காட்சி பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.

    தொடர்ந்து குழந்தையை கடத்திய நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவருக்கு குழந்தை கடத்தலை சேர்ந்த கும்பலுடன் ஏதாவது தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    பொள்ளாச்சியில் 4 மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×