search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிபா வைரஸ்
    X
    நிபா வைரஸ்

    ‘நிபா’ வைரஸ் வவ்வால் மூலம் பரவுவது எப்படி?

    வவ்வால்கள் வாழும் இடத்தில் வவ்வால்கள் உயிரிழந்தோலோ, அல்லது மரத்தில் இருந்து வித்தியாசமான துர்நாற்றம் வீசினாலோ உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
    வவ்வால்கள் பொதுவாக மனிதர்களுக்கு எவ்வித தொந்தரவும் கொடுக்காது. ஆனால் மனித உயிருக்கு ஆபத்தான ‘நிபா’ வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவுகிறது.

    இதுகுறித்து கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:-

    வவ்வாலில் இருந்துதான் நிபா வைரஸ் பரவுகிறது என்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது. இது என்.ஐ.வி. தொற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. பழந்தின்னி வவ்வால்கள் சாப்பிட்ட பழங்கள் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது என கண்டறியப்பட்டு உள்ளது. வைரஸ் பாதித்த வவ்வால், சாப்பிடும் பழங்களை நாம் சாப்பிடும்போது அதன் மூலம் எளிதாக நமக்கு நிபா வைரஸ் பரவிவிடுகிறது.

    குறிப்பாக பன்றி வளர்ப்பவர்கள், கீழே வீணாக கிடக்கும் பழங்களை சேகரித்து எடுத்து அதற்கு சாப்பிட கொடுக்கிறார்கள். அவற்றில் நிபா வைரஸ் பாதித்த பழங்கள் இருந்தால் அந்த நோய் பன்றிகளுக்கும் பரவும். அதன் மூலம் மனிதர்களுக்கு எளிதாக பரவிவிடும். இதுதவிர வவ்வாலின் சிறுநீர், உமிழ்நீர், கழிவுகள், உயிரணுக்கள் மூலமும் இந்த நிபா வைரஸ் பரவுகிறது. மேலும் கீழே விழுந்து கிடக்கும் கடிக்கப் பட்ட பழங்களை எடுத்து சாப்பிட்டால் கூட சிக்கல்தான். எனவே யாரும் கீழே கிடக்கும் பழங்களை எடுத்து சாப்பிடக்கூடாது.

    வவ்வால்

    மேலும் இந்த வைரஸ் பாதித்த வவ்வால்கள் விரைவில் உயிரிழந்துவிடும். எனவே உயிரிழந்த வவ்வால்களை பரிசோதனை செய்து அது நிபா வைரசால் பாதிக்கப்பட்டதா என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அது போன்று வவ்வால்கள் வாழும் இடத்தில் வவ்வால்கள் உயிரிழந்தோலோ, அல்லது மரத்தில் இருந்து வித்தியாசமான துர்நாற்றம் வீசினாலோ உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சிலர் வவ்வால்களை பிடித்து சாப்பிடுவதும் உண்டு. அதை அவர்கள் உடனடியாக தவிர்க்க வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் யாரும் வவ்வால்கள் இருக்கும் இடத்துக்கு செல்வதை தவிர்ப்பது மிக நல்லது. எனவே வவ்வால்கள் விஷயத்தில் பொதுமக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


    Next Story
    ×