search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்ணமயமாகும் கிராமப்புற சுவர்கள்
    X
    வண்ணமயமாகும் கிராமப்புற சுவர்கள்

    உள்ளாட்சி தேர்தல்- விதவிதமான சின்னங்களால் வண்ணமயமாகும் கிராமப்புற சுவர்கள்

    கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த ஓவியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். உள்ளாட்சி தேர்தல் அவர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் களைகட்ட தொடங்கி உள்ளது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது.

    வருகிற 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதனால் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் வேட்பாளர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கிராமப்புறங்களில் வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் தினமும் காலையில் இருந்து ஓட்டு சேகரிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

    பெரும்பாலும் சொந்த ஊரில் தனது உறவினர்கள், நண்பர்கள் மத்தியிலேயே போட்டியிடுவதால் அதற்கான எந்த ஆரவாரமும் இல்லாமல் சாதாரணமாகவே சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். ஒருசில இடங்களில் பஞ்சாயத்து தலைவர் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களின் கால்களில் விழுந்து ஆசி பெற்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    ஒரு சில கிராமங்களில் வசதியான வேட்பாளர்கள் தாரை தப்பட்டைகளுடன் மேள தாளம் முழங்க வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிக்கின்றனர். பிரசாரத்தின் ஒரு பகுதியாக தங்களுக்கான சின்னத்துடன் கூடிய துண்டு பிரசுரங்களை அடித்து வீடு வீடாக கொடுத்து வருகின்றனர்.

     

    கொரோனா வைரஸ்

    கிராமப்புற சுவர்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் வரையும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பைனாகுலர், யானை, கட்டில், சீப்பு, பூட்டு சாவி, திறவுகோல், ரோலர், ஆட்டோ ரிக்ஷா, கார், துடைப்பம் உள்ளிட்ட ஏராளமான சின்னங்கள் கிராம வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இந்த சின்னங்களை சுவர்களில் வரையும் பணியில் ஓவியர்கள் களம் இறங்கி உள்ளதால் கிராமப்புற சுவர்கள் வண்ணமயமாகி வருகிறது.

    இதனால் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த ஓவியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். உள்ளாட்சி தேர்தல் அவர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது.

    இதுகுறித்து ஓவியர்கள் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளாக ஓவியம் மற்றும் சுவர் விளம்பரங்கள் வரையும் வேலை பார்க்கிறோம். தேர்தல் காலத்தில் எப்போதும் எங்களுக்கு தனி மவுசு உண்டு.

    பொதுவாக அதிகம் வரையப்படும் சின்னங்களான இரட்டை இலை, உதயசூரியன், தாமரை போன்ற சின்னங்களை எளிதில் வரைந்து விடலாம். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் கார், லாரி, ஆட்டோ உள்ளிட்ட சுயேட்சை சின்னங்களை வரைவதற்கு பயிற்சி வேண்டும்.

    உள்ளாட்சி தேர்தலால் எங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி கிடைத்துள்ளது. அரசு எங்களை போன்றவர்களின் வாழ்வாதாரம் மேம்பட அரசு திட்டங்களை விளம்பரப்படுத்த எங்களை பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் தனியார் இடங்களின் உரிமையாளர்களிடம் அனுமதி பெற்றிருந்தாலும் சுவரொட்டிகள், விளம்பரம் செய்தல், கட்-அவுட்டுகள் கட்டுதல் போன்றவற்றுக்கு மாநில தேர்தல் ஆணையம்தடை விதித்துள்ளது. இந்த திடீர் உத்தரவால் ஓவியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதையும் படியுங்கள்... பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஆஸ்பத்திரியில் அனுமதி

    Next Story
    ×