search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    குமரியில் இன்றும் வெளுத்து வாங்கிய மழை: மாணவ- மாணவிகள் அவதி

    கன்னியாகுமரி பகுதியில் இன்று மழை கொட்டித்தீர்த்தது. இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டது. தாழ்வான பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்திருந்தது.

    நேற்று மழை சற்று குறைந்து இருந்தது. காலை முதலே வெயில் அடித்து வந்தது. தாழ்வான பகுதியில் தேங்கி இருந்த வெள்ளம் வடிய தொடங்கியது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது.

    நாகர்கோவிலில் இன்று காலை 7 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது கன மழை கொட்டித்தீர்த்தது. அதன் பிறகும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

    இதனால் கோட்டார் சாலை, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, அசம்புரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இடைவிடாது பெய்த மழையின் காரணமாக மாணவ-மாணவிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளானார்கள். இருப்பினும் மாணவிகள் வீட்டில் இருந்து குடை பிடித்தவாறு பள்ளிக்கு வந்தனர்.

    கிராமபுறங்களில் இருந்து நாகர்கோவிலில் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளும் சிரமப்பட்டனர். சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் இருசக்கர வாகன ஓட் டிகள் பலர் சிக்கி தவித்தனர்.

    கோட்டார் சாலை பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது. இன்று காலையில் பெய்த மழையில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கியது. சாலையில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். பஸ்களும் ஊர்ந்து வந்தது. பறைக்கால்மடம் தெருவில் இன்று 2-வது நாளாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பரிதவித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி பகுதியிலும் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. காந்தி மண்டப சாலையில் மக்கள் நடமாட்டம் இன்றி இருந்தது.

    கொட்டாரம், மைலாடி, சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம், இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் காலை முதலே மழை பெய் தது . இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினார்கள். ஆரல்வாய் மொழி செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் 2-வது நாளாக செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    கீரிப்பாறை, குலசேகரம், தடிக்காரன்கோணம் பகுதியில் உள்ள ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள செரட்டைகளிலும் மழை நீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

    தொடர் மழைக்கு விளவங்கோடு தாலுகாவில் 2 வீடுகளும், கிள்ளியூரில் 3 வீடுகளும் இடிந்து விழுந்துள்ளது. இதில் யாரும் காயம் இன்றி அதிஷ்டவசமாக தப்பினார்கள்.

    Next Story
    ×