search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் பஜார்களில் குவிந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.
    X
    திருப்பூர் பஜார்களில் குவிந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

    கொரோனா அச்சமின்றி திருப்பூர் பஜார்களில் குவிந்த பொதுமக்கள்

    கொரோனா தொற்று முழுவதும் கட்டுக்குள் வராமல் இருப்பதால் அரசு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 670 ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 96 பேர் நேற்று குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 773 ஆக உள்ளது. 

    மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 944 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கொரோனா பலி இருந்து வந்தது. 

    ஆனால் நேற்று யாரும் இறக்கவில்லை. இதனால் பலி எண்ணிக்கை 953 ஆக உள்ளது. கொரோனா தொற்று முழுவதும் கட்டுக்குள் வராமல் இருப்பதால் அரசு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
     
    மாவட்டத்தில் நேற்று நடந்த  மூன்றாவது சிறப்பு முகாமில் 78 ஆயிரத்து 262 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 3 வாரங்களாக நடந்த முகாம்களில் மொத்தம் 2 லட்சத்து 90 ஆயிரத்து 804 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

    இந்தநிலையில் திருப்பூரில் கொரோனாவை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் விதமாக விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை கடை வீதிகளில் சமூக இடைவெளி  இல்லாமலும், மாஸ்க் அணியாமலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர் மாநகரில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் உள்ள நிலையில், பிரதான தொழிலான பனியன் கம்பெனிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடுவது வழக்கம். 

    சுமார் 6 ஆயிரம் பனியன் கம்பெனிகள் நேற்று விடுமுறை விடப்பட்ட நிலையில் திருப்பூரில் உள்ள புதுமார்க்கெட் வீதி, மாநகராட்சி சந்திப்பு, வளர்மதி பஸ் ஸ்டாப், குமரன் ரோடு, பி.என்., ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  கடைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    சமூக இடைவெளி பற்றி எந்த கவலையும் இல்லாமல் வழக்கமான நாள் போல பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு கடைவீதிகளிலும், கடைகளிலும் அலைமோதினர். கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் மாஸ்க் அணியாமல் வந்திருந்தனர். 

    தீபாவளி நெருங்கும் வேளையில் கட்டுப்பாடுகளை சரியாக கடைப்பிடித்தால் மட்டுமே பண்டிகை நேரத்தில் இன்னொரு கொரோனா அலை வராமல் தடுக்க முடியும். 

    ஆனால் திருப்பூரில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவது இன்னொரு கொரோனா அலைக்கு விதை போடும் விதமாக உள்ளது. எனவே இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×