search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவைக்கு பயிற்சிக்கு வந்த விமானப்படை பெண் அதிகாரி கற்பழிப்பு- சக அதிகாரி கைது

    விமானப்படை பெண் அதிகாரி அளித்த புகாரின் பேரில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் தீபக் தாமோர் அனைத்து மகளிர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
    கோவை:

    கோவை ரெட்பீல்டில் விமானப்படை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு டெல்லியை சேர்ந்த 28 வயது பெண் அதிகாரி ஒருவரும் பயிற்சி பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் அந்த பெண் அதிகாரி தன்னை விமானப்படை கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் மற்றொரு அதிகாரி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கோவை கமி‌ஷனர் அலுவலகத்தில் கமி‌ஷனரை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றரை அளித்துள்ளார்.

    அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது சொந்த ஊர் டெல்லி. நான் விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து பயிற்சிக்காக கோவை ரெட்பீல்டில் உள்ள விமானப்படை பயிற்சி கல்லூரிக்கு வந்தேன்.

    கல்லூரியில் என்னுடன் 30-க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி நான் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது எதிர்பாராதவிதமாக எனது காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அதற்கான சிகிச்சை எடுத்து கொண்ட நான் அறையில் சென்று ஓய்வெடுத்தேன்.

    அப்போது எனது அறைக்குள் அதே கல்லூரியில் பயிற்சியில் ஈடுபட்டு வரக்கூடிய மற்றொரு அதிகாரியான சத்தீஸ்கரை சேர்ந்த அமித்தேஸ் என்பவர் அத்துமீறி நுழைந்தார். பின்னர் என்னை வலுக்கட்டாயமாக கற்பழித்தார்.

    இதனால் பாதிக்கப்பட்ட நான் சம்பவம் குறித்து கல்லூரியில் உள்ள உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விமானப்படை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    விமானப்படை பெண் அதிகாரி அளித்த புகாரின் பேரில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் தீபக் தாமோர் அனைத்து மகளிர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து அனைத்து மகளிர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விமானப்படை அதிகாரியான அமித்தேசை கைது செய்தனர்.

    பின்னர் அவரை நீதிபதி வீட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது அதிகாரி அமித்தேஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், விமானப்படை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அதிகாரமில்லை என்றார். இருப்பினும் நீதிபதி விமானப்படை அதிகாரி அமித்தேசை ஒரு நாள் மட்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×