search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    விசைத்தறியாளர்களுக்கான கூலி உயர்வு பேச்சுவார்த்தை - அடுத்த மாதம் ஒத்திவைப்பு

    கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை திருப்பூர், கோவை மாவட்டங்களில் தொழிலாளர் நலத்துறை ஆணையாளர்கள் முன்னிலையில் இதுவரை 6 முறை நடைபெற்றது.
    பல்லடம்:

    திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 1/2 லட்சம் விசைத்தறிகள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள், குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும், வாழ்வாதாரம் பெறுகின்றனர்.போதுமான வேலை வாய்ப்புகள் இருந்தும் கூலி உயர்வு இல்லாதது, உதிரி பாகங்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என்று தொடர்ந்த செலவுகளால் விசைத்தறி தொழிலில் லாபம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கடந்த 2014ல் கடைசியாக கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. 

    2017 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்திருக்க வேண்டிய புதிய கூலி உயர்வு பேச்சுவார்த்தை பல்வேறு காரணங்களால் நடைபெறவில்லை. இந்தநிலையில் கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை  திருப்பூர், கோவை மாவட்டங்களில் தொழிலாளர் நலத்துறை ஆணையாளர்கள் முன்னிலையில் இதுவரை 6 முறை நடைபெற்றது. 

    ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இந்தநிலையில் கோவையில் நேற்று தொழிலாளர் துறை இணை ஆணையர் முன்னிலையில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் விசைத்தறியாளர்களுக்கு புதிய கூலி உயர்வு குறித்து நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் விசைத்தறியாளர்கள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும்,சோமனூர் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் 10 பேர் கலந்துகொண்டனர். பல்லடம்,திருப்பூர்,அவிநாசி உள்ளிட்ட பகுதிகளின் ஜவுளி உற்பத்தியாளர்கள் வரவில்லை.  சோமனூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் நூல் விலையேற்றத்தால் தற்போதைக்கு கூலி உயர்வு வழங்க முடியாது என்று கூறப்பட்டது. 

    விசைத்தறியாளர்கள் தரப்பில் உதிரி பாகங்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கூலி உயர்வு அவசியம் என வலியுறுத்தப்பட்டது. இருதரப்பு கருத்துக்களையும் கேட்ட அதிகாரிகள் சோமனூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மட்டும் கலந்து கொண்டதால் பல்லடம் உள்ளிட்ட மற்ற பகுதி ஜவுளி உற்பத்தியாளர்களையும் அழைத்து வரும் அக்டோபர் 22-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என முடிவு செய்து பேச்சுவார்த்தையை மீண்டும் ஒத்திவைத்தனர்.  
    Next Story
    ×