search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    தமிழ்நாட்டில் தனியார் யாரும் இனிமேல் யானைகளை வளர்க்க கூடாது- ஐகோர்ட்டு உத்தரவு

    கடந்த 5 ஆண்டுகளில் வளர்ப்பு யானைகள், கோவில் யானைகள், வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த யானைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள கோவில் யானைகளை முறையாக பராமரிப்பது குறித்து சென்னை ஐகோர்ட்டில் ரங்கராஜன் நரசிம்மன் உள்பட பலர் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை எல்லாம் ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, தமிழ்நாட்டில் கோவில் யானைகள், வளர்ப்பு யானைகள், வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள யானைகளின் எண்ணிக்கை, அவற்றின் வயது, உடல்நிலை குறித்த விவர அறிக்கையுடன், அவற்றின் வீடியோ பதிவையும் தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

    அப்போது, தமிழ்நாட்டில் கோவில்களின் கட்டுப்பாட்டில் 32 யானைகளும், தனியார் கட்டுப்பாட்டில் 31 யானைகளும், வனத்துறை கட்டுப்பாட்டில் 67 யானைகளும் உள்ளதாகவும், அவற்றை வீடியோ பதிவு செய்யும் பணிகள் நடந்துவருவதால், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், 2019-ம் ஆண்டு வனத்துறை வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் 150 யானைகள் உள்ளதாக கூறியிருந்தது. ஆனால், தற்போது 130 யானைகள் மட்டுமே உள்ளன என்று கூறியுள்ளது. 20 யானைகள் என்ன ஆயின என்பது தெரியவில்லை’ என்று கூறினர்.

    மேலும், ‘தாய்லாந்து போன்ற சின்ன நாடுகளில்கூட யானைகளுக்கு அறுவைசிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அந்த அளவுக்கு நம் நாட்டில் யானைகளுக்கு சிகிச்சை வழங்கும் வசதிகள் இல்லை’ என்றும் கூறினர்.

    அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘கடந்த 5 ஆண்டுகளில் வளர்ப்பு யானைகள், கோவில் யானைகள், வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த யானைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இனிமேல் தனியார் யாரும் யானைகளை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து வளர்க்க கூடாது. இந்த வழக்கை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.
    Next Story
    ×