search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பொள்ளாச்சியில் வனசரகர் கைதை கண்டித்து வனத்துறையினர் 2-வது நாளாக போராட்டம்

    பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பும், மாவட்ட வனத்துறை அலுவலகம் முன்பு ஏராளமான வனத்துறையினர் திரண்டு வந்து வனசரகர் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் வால்பாறை வனசரகத்தில் சிறுகுன்றா எஸ்டேட் பகுதி உள்ளது. தற்போது வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகளில் சிலர் சிறுகுன்றா எஸ்டேட்டில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி இரவு அப்பகுதிக்கு ரோந்து வந்த வனசரகர் ஜெயச்சந்திரன் மதுபோதையில் சுற்றுலா பயணிகளை திட்டியதாக வால்பாறை குற்றவியல் நீதிமன்ற ஊழியர் மனோகரன்(56) புகார் அளித்தார்.

    அதன்பேரில் ஜெயச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே வனசரகர் ஜெயசந்திரன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி 100-க்கும் அதிகமான வனத்துறையினர் அட்டகட்டி சோதனை சாவடியில் திரண்டு கோ‌ஷம் எழுப்பினர். தொடர்ந்து பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து இருந்தனர்.

    இன்று 2-வது நாளாக பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பும், மாவட்ட வனத்துறை அலுவலகம் முன்பு ஏராளமான வனத்துறையினர் திரண்டு வந்து வனசரகர் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் விடுதிக்கு வெளியே அமர்ந்திருந்தனர். வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் இரவு நேரத்தில் வெளியில் நடமாட வேண்டாம் என வனசரகர் தெரிவித்துள்ளார். ஆனால் வனசரகர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்டேட் பகுதியில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகளை அழைத்து விசாரிக்காமல் ஒரு தலைபட்சமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை கண்டித்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    Next Story
    ×