search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது எடுத்த படம்.
    X
    ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது எடுத்த படம்.

    உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது- எடப்பாடி பழனிசாமி பேச்சு

    ஆளும் கட்சியில் இருந்ததை விட எதிர்கட்சியாக இருக்கும் போது தான் தொண்டர்களின் வரவேற்பு பிரம்மாண்டமாக இருக்கிறது என ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    சங்கரன்கோவில்:

    நெல்லை, தென்காசி உள்பட விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக வருகிற 6 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

    இதையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அவர்களை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு வந்தார்.

    இதற்காக இன்று காலை 7.30 மணிக்கு மதுரையில் இருந்து கார் மூலம் சங்கரன்கோவிலுக்கு வந்தார். சங்கரன்கோவில் அம்சா காட்டேஜில் காலை 9.30 மணிக்கு நடைபெற்ற தென்காசி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை சந்தித்து பேசினார்.

    தேர்தலில் வெற்றி பெற எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசியதாவது:-

    ஆளும் கட்சியில் இருந்ததை விட எதிர்கட்சியாக இருக்கும் போது தான் தொண்டர்களின் வரவேற்பு பிரம்மாண்டமாக இருக்கிறது. மாவட்டங்கள் புதிதாக உருவாக்க வேண்டும் என்ற எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையை ஏற்று நமது ஆட்சியில் தென்காசி புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.

    தி.மு.க.வினால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவது காலதாமதம் ஆகி விட்டது. தென்காசி மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை வேட்பாளர்கள் நிரூபித்து காட்ட வேண்டும். தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் தோற்று உள்ளோம்.

    உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை கிராமபுறங்களில் நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கிராமங்கள் நமது பக்கம் உள்ளன. கிராம பகுதிகளில் நமக்கு நல்ல விளைச்சல் இருக்கிறது. அதனை நல்ல முறையில் வேட்பாளர்கள் அறுவடை செய்ய வேண்டும். அது உங்கள் கையில் தான் உள்ளது.

    மக்கள் மனதில் இடம் பெற்று அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் ஒட்டு மொத்தமாக சேர்ந்து ஓட்டு சேகரிக்க வேண்டும். கட்சிக்கு வலிமை சேர்க்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை சாதாரணமாக நினைக்க கூடாது.

    உள்ளூர் மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்களால் மட்டுமே வெற்றி பெற முடியும். அப்படிப்பட்ட வேட்பாளர்களை தான் நாம் நிறுத்தி உள்ளோம். கிராம புறங்களில் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் தான் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டது.

    ஜெயலலிதா


    ஜெயலலிதா 15½ ஆண்டுகள் முதல்-அமைச்சராக பணியாற்றி தமிழக மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர். அவரது ஆட்சி காலத்தில் சிறப்பான கல்விக்காக சத்துணவு, விலையில்லா சைக்கிள்கள், மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

    ஆண்டுதோறும் 5½ லட்சம் பேருக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. இதுவரை சுமார் 52 லட்சம் பேருக்கு மடிக்கணினி தந்த அரசு அம்மாவின் அரசு. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஆரம்ப பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்தது. 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்த போது 100 மாணவர்களில் 34 மாணவர்கள் தான் உயர்கல்வி பயின்றார்கள்.

    ஆனால் அதன் பின்னர் உயர்கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் 11 மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டது. புதிய தாலுகாக்கள், 6 மாவட்டங்கள் ஆகியவை கடந்த 4 ஆண்டுகளில் தொடங்கப்பட்டது.

    மிக்சி, கிரைண்டர் என அறிவித்த அனைத்து வாக்குறுதிகளும் அ.தி.மு.க. அரசால் நிறைவேற்றப்பட்டு விட்டது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை 100-க்கு 100 சதவீதம் நிறைவேற்றிய அரசு அ.தி.மு.க. தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் நெல்லை புறப்பட்டார். பாளை மகாராஜ நகரில் உள்ள வி.எம்.எஸ். திருமண மண்டபத்தில் மதியம் நெல்லை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்களை சந்தித்து ஆலோசனை வழங்கினார்.


    Next Story
    ×