search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
    X
    விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    அரசின் திட்டங்களை நிறைவேற்ற அமைச்சர்கள் போட்டா போட்டி- மு.க.ஸ்டாலின் பேச்சு

    தி.மு.க. ஆட்சி என்பது உழவர்களின் ஆட்சியாக, வேளாண்மை புரட்சி செய்யும் ஆட்சியாகத்தான் எப்போதும் இருந்திருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
    சென்னை:

    தமிழகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணை வழங்குவதற்கான துவக்க விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    விழாவுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு மின் இணைப்புக்கான ஆணைகள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    லட்சக்கணக்கான உழவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை உருவாக்கக்கூடிய வகையில் ஒரு திட்டமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. கடந்த மே மாதம் 7-ந் தேதி நான் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவி ஏற்றேன் என்று சொல்லமாட்டேன். பொறுப்பை ஏற்றேன் என்று சொல்வதுதான் சாலச்சிறந்ததாக இருக்கும்.

    அன்று முதல் இன்று வரை நாள்தோறும் ஏராளமான திட்டங்கள் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அப்படி அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை தொடங்கி வைப்பது, அந்த திட்டங்கள் மக்களுடைய பயன்பாட்டிற்கு இருக்கும் வகையிலே இருக்க வேண்டும் என்பது தான் அரசினுடைய திட்டமாக அமைந்து இருக்கிறது.

    விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிற அனைத்து அமைச்சர்களும் போட்டி போட்டுக்கொண்டு இப்போது செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கேட்கிற தேதியைக் கூட என்னால் உடனடியாக வழங்க முடியாத நிலையில் ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏராளமான திட்டங்களை தொடங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி தொடங்கக்கூடிய அமைச்சர்களில் வழக்கம் போல் அமைச்சர் செந்தில்பாலாஜி வேகமாக முந்திக்கொண்டு என்னிடம் தேதியை வாங்கி இந்த திட்டத்தை அவர் தொடங்கிவிட்டார். அதற்காக முதலில் அமைச்சர் செந்தில் பாலாஜியை மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

    சில திட்டங்கள் அந்த நேரத்துக்கு தேவையானதாக இருக்கும். சில திட்டங்கள் சில ஆண்டுகளுக்கு தேவையானதாக இருக்கும். சில திட்டங்கள் தலைமுறை தலைமுறைக்கு பயனுள்ளதாக இருக்கும். அந்த வரிசையில் தலைமுறை தலைமுறைக்கு பயனுள்ள திட்டம்தான் இங்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    1 லட்சம் மின் இணைப்புகள் வழங்கக்கூடிய திட்டமாக இது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக உழவர்கள் பயன் பெறுவதால் தங்களுக்கு மட்டுமல்ல, இந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய இருக்கிறார்கள். அத்தகைய மகத்தான திட்டம்தான் இந்த திட்டம்.

    கடந்த 2006- 2011 தி.மு.க. ஆட்சியில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 910 பேருக்கு புதிய மின் இணைப்புகள் தரப்பட்டது. ஆனால் 2011- 2016 அ.தி.மு.க. ஆட்சியில் 82 ஆயிரத்து 987 பேருக்கும், 2016- 2021 அ.தி.மு.க. ஆட்சியில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 591 பேருக்குதான் புதிய மின் இணைப்புகள் தரப்பட்டன.

    இதைத்தான் நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சிக்கும், தி.மு.க. ஆட்சிக்கும் இருந்த வேறுபாடு என்ன என்பது இதுதான். 10 ஆண்டுகாலத்தில் சுமார் 2 லட்சம் இணைப்புகள் அ.தி.மு.க. ஆட்சியிலே தரப்பட்டது.

    ஆனால் நாம் ஆட்சி பொறுப்புக்கு வந்த 4 மாதத்தில் 1 லட்சம் இணைப்புகளை இப்போது கொடுக்கப்போகிறோம். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டுமானால் இதைவிட இன்னும் வேகமான ஆட்சி இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.

    தி.மு.க. ஆட்சி என்பது உழவர்களின் ஆட்சியாக வேளாண்மை புரட்சி செய்யும் ஆட்சியாகத்தான் எப்போதும் இருந்திருக்கிறது. இந்த மண்ணையும், மக்களையும் காப்பதில் யாருக்கும் சளைக்காதவர்கள்தான் தி.மு.கழகத்தினர் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. எனவே விவசாயிகள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    Next Story
    ×