search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலத்த மழையால் புரசைவாக்கத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சி
    X
    பலத்த மழையால் புரசைவாக்கத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சி

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விடிய விடிய மழை

    விடிய விடிய பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு 10 மணி முதல் மழை பெய்தது. சிறு தூரலாக ஆரம்பித்த மழை நள்ளிரவில் கன மழையாக கொட்டியது. இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்த மழை காலை வரை நீடித்தது.

    சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் ஒருசில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.

    கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உஷ்ணமாக இருந்த நிலையில் சென்னையில் மழை பெய்து குளிர வைத்துள்ளது. புரசைவாக்கம், வேப்பேரி, பாரிமுனை, பெரம்பூர், வடபழனி, மயிலாப்பூர், கோயம்பேடு, அண்ணாநகர், வேளச்சேரி, மடிப்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட பல் வேறு இடங்களில் மழை பெய்தது.

    இதே போல புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    புழல், செங்குன்றம், பொன்னேரி, மதுரவாயல், பூந்தமல்லி, பல்லாவரம், திருவேற்காடு, புழுதிவாக்கம், தாம்பரம், மேடவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கன மழை பெய்தது.

    காலையிலும் வானம் இருண்டு காணப்பட்டது. மழைத்தூரல் இருந்து கொண்டே இருந்தது. ஆனாலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் இரு சக்கர வாகனங்களிலும், ஆட்டோ, கார்களில் அன்றாட பணியை தொடங்கினார்கள்.

    மாணவ-மாணவிகள் மழை கோட் அணிந்தும், குடை பிடித்தவாறும் பள்ளிகளுக்கு சென்றார்கள்.

    திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இரவு முதல் கன மழை பெய்தது. திருவள்ளூர், பேரம்பாக்கம், கடம்பத்தூர், பூண்டி, வேப்பம்பட்டு, ஈக்காடு, தாமரைப்பாக்கம், பட்டரை பெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    ஆர்.கே.பேட்டையில் 57 மி.மீ., சோழவரம்-39, திருத்தணி-37, செங்குன்றம்-29, ஊத்துக்கோட்டை-21, பொன்னேரி-20, பள்ளிப்பட்டு, பூந்தமல்லி தலா 17 மி.மீ., தாமரைப்பாக்கம்-17 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

    பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர், திருப்பாலைவனம், மெதூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்தது.

    மெதூர் ஊராட்சிககு உட்பட்ட தண்டலம் காலனியைச் சேர்ந்த முரளி (45) என்பவர் இரவு வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது இடியுடன் கனமழை பெய்ததில் தொகுப்பு வீட்டின் படுக்கை அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

    இதில் முரளி உள்பட 3 பேர் உயிர் தப்பினர். வீட்டில் இருந்த பீரோ, கட்டில் மற்றும் பொருட்கள் சேதம் அடைந்தன.

    விடிய விடிய பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கும் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

    Next Story
    ×