search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலி
    X
    பலி

    கோவில்பட்டி பகுதியில் கனமழை- இடிதாக்கி 2 பேர் பலி

    மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை விநாடிக்கு 15 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 62.83 அடியாக உள்ளது.
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    சில இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்கிறது. நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், நம்பியாறு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும், தென்காசி மாவட்டத்தில் சங்கரன் கோவில் மற்றும் மலை பகுதியிலும் மழை பெய்தது.

    நம்பியாறு அணை பகுதியில் 10 மில்லி மீட்டரும், சங்கரன்கோவிலில் 6 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 3 மில்லி மீட்டரும், மூலக்கரைப் பட்டியில் 2 மில்லி மீட்டரும் இன்று காலை வரை பெய்த மழை அளவாக பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூர் பகுதியில் நேற்று கனமழை கொட்டியது. கயத்தாறு, எட்டயபுரம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஓரளவு மிதமான மழையும், கோவில்பட்டியில் சாரல் மழையும் பெய்தது. கடம்பூரில் அதிகபட்சமாக 27 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது.

    எட்டயபுரத்தில் 8.3 மில்லி மீட்டர், ஸ்ரீவைகுண்டத்தில் 3 மில்லி மீட்டர், கயத்தாறில் 2 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.

    நேற்று கோவில்பட்டி பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தபோது பாண் டவர் மங்கலத்தை சேர்ந்த எட்டப்பன் (வயது 49) என்பவர் காட்டு பகுதியில் உள்ள வேப்பமரத்தின் கீழ் ஒதுங்கி உள்ளார். அப்போது இடி தாக்கி யதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

    இது போல ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வெங்கடேசபுரம் கிராமத்தை சேர்ந்த முருகையா (55) என்பவர் ஆடு மேய்த்து கொண்டிருக்கும்போது இடி தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து உள்ளது. பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 696 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 805 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது பாபநாசம் அணை நீர்மட்டம் 80.75 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் 91.21 அடியாகவும் உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை விநாடிக்கு 15 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 62.83 அடியாக உள்ளது.

    குற்றால அருவிகளிலும் தொடர்ந்து தண்ணீர் விழுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அருவி கரையோரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

    Next Story
    ×