search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    போலி நகைகளை அடகு வைத்து மோசடி- கூட்டுறவு வங்கியில் அதிகாரிகள் ஆய்வு

    திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள நகைகளை அதிகாரிகள் மறு மதிப்பீடு செய்து வருகிறார்கள்.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் சிலர் தரம் குறைவாக போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் பீமாரப்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தனது உறவினரின் நகையை வைத்து மல்லசமுத்திரம் தொடக்க வேளாணமை கூட்டுறவு கடன் வங்கியில் 2 வளையல்களுக்கு கிராமுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் ரூ. 66 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.

    அவரை அழைத்த வங்கி ஊழியர்கள் பாலகிருஷ்ணனின் நகை தமிழக அரசு 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடியின் கீழ் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகவும் அதனை உடனடியாக வந்து பெற்றுச் செல்லுமாறும் கூறி உள்ளனர். இதனை நம்பி வங்கிக்கு வந்த பாலகிருஷ்ணனிடம் வங்கியில் அடகு வைத்துள்ள நகை போலி என்றும் அதனை உடனடியாக முழு பணம் கட்டி மீட்காவிட்டால் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விடுவதாக வங்கி ஊழியர்கள் கூறியுள்ளனர்.

    தங்க நகையை உரசிப் பார்த்து தானே வாங்கினீர்கள்? இது முறையா என பாலகிருஷ்ணன் கேட்டார். இதனிடையே ஊர் மக்கள் வங்கியை முற்றுகையிட்டனர். பாலகிருஷ்ணன் மனைவி சுந்தராம்பாள் போலீஸ் நிலையத்தில் கொடுத்த தகவலின் பேரில் வங்கிக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    இது குறித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், நகைகளை அடகுவைக்கும் போது நகையை மதிப்பீட்டாளர் அங்கமுத்து உரசி பார்த்து சொன்னதன்பேரில்தான் பணம் கொடுத்தனர். தற்போது என்னை நகைக்கடன் தள்ளுபடி என கூறி வரவழைத்து போலி நகை, பணம் கட்டாவிட்டால் சிறைக்கு செல்வாய் என கூறுகிறார்கள் என்றார்.

    கோப்புப்படம்

    இதனிடையே மல்லசமுத்திரம் கூட்டுறவு வங்கியில் இதுபோல் வேறு போலி நகைகள் அடகு வைக்கப்பட்டு உள்ளதா? இதில் வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்று நாமக்கல் மாவட்ட கூட்டுறவு உயர் அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த குழுவினர் மல்லசமுத்திரம் கூட்டுறவு வங்கியில் சோதனை செய்தனர். மேலும் அங்கு வைக்கப்பட்டு உள்ள நகைகளை மறு மதிப்பீடு செய்து வருகிறார்கள். மேலும் ஊழியர்களிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடந்து வருகிறது.


    Next Story
    ×