search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்டத்தில் நாளை கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் - பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுகோள்

    முகாம்களில் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தேவையான அளவில் தடுப்பூசி உள்ளதை உறுதி செய்திடுமாறும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் நாளை 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தடுப்பூசி செலுத்துவதற்காக கொரோனா சிறப்பு மாபெரும் தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் நடைபெற்றது.

    அப்போது கலெக்டர் வினீத் தெரிவித்ததாவது:

    திருப்பூர் மாவட்டத்தில் தற்போது விடுபட்டுள்ள தகுதியுடைய 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பொருட்டு நாளை மாவட்டம் முழுவதும் மீண்டும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

    மாபெரும் தடுப்பூசி முகாம் எவ்வித இடையூறுகளும் இன்றி நடைபெறுவதை உறுதிசெய்திடும் வகையில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் எவ்வித இடையூறுமின்றி தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு வட்டார வாரியாக வட்டார பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

    வட்டார பொறுப்பு அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட வட்டாரங்களில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படுவதற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை கண்காணித்தும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில், முகாம்களில் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தேவையான அளவில் தடுப்பூசி உள்ளதை உறுதி செய்திடுமாறும் உத்தரவிடப்படுகிறது. 

    மேலும் தடுப்பூசி முகாம் நடைபெறும் நேரத்தில் மையங்களுக்கு கூடுதலாக தடுப்பூசிகள் தேவைப்படும் பட்சத்தில் மருத்துவ துறையினரையும், வருவாய் துறையினரையும் தொடர்பு கொண்டு தேவையான எண்ணிக்கையில் தடுப்பூசியினை பெற்று மையங்களுக்கு தாமதமின்றி வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

    வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து இந்தசிறப்பு முகாமினை நடத்திட அறிவுரை வழங்கப்பட்டது.

    மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 20,77,095. இதில் இதுவரை 13,81,390 நபர்கள் முதல் தவணையும் 2,62,252 பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 

    மேலும், 6,95,705 நபர்களுக்கு முதல் தவணையும், 1,32,866 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட வேண்டும். முதற்கட்டமாக கடந்த 12-ந்தேதி நடைபெற்ற முகாமில் 1,23,163 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து நாளை 76,821 பேருக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்படுள்ளது. 

    இதற்காக சிறப்பு தடுப்பூசி முகாம் 672 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், டோல்கேட் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்து இலவசமாக வழங்கப்படவுள்ளது.

    இப்பணிக்காக 2,688 பல்வேறு துறைகளை சார்ந்த பணியாளர்கள், மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கு தேவையான மருந்துகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இந்த நல்ல வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் கிரந்தி குமார், தாராபுரம் சப்-கலெக்டர் ஆனந்த்மோகன், உதவி கலெக்டர் (பயிற்சி) அப்தாப் ரசூல் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல்ஹமீது மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×