search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தொற்று குறைந்து இறப்பு அதிகரிப்பு- திருச்சி மத்திய மண்டலத்தில் ஒரே நாளில் 9 பேர் பலி

    தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வேகத்தில் நடக்கிறது. தொடர்ச்சியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
    திருச்சி:

    தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு 1,500-க்கும் கீழ் குறைந்தது. இது சுகாதாரத்துறைக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திய நிலையில் சில நாட்களாக மீண்டும் தொற்று எண்ணிக்கை ஏறுமுகத்தில் உள்ளது.

    நேற்று அதிகபட்சமாக ஒரே நாளில் 1,658 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதோடு, 29 பேர் பலியாகினர். இதனால் 3-வது அலை வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வேகத்தில் நடக்கிறது. தொடர்ச்சியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முகாம்களுக்கு வர இயலாதவர்களுக்கு வீடு தேடிச் சென்று மொபைல் டீம் தடுப்பூசி செலுத்துகிறது.

    இதனால் கொத்து கொத்தாக கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சாவூரை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் கடந்த சில தினங்களை ஒப்பிடும் போது தொற்றுகள் கணிசமாக குறைந்துள்ளன.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக 100-ஐ தாண்டிய தினசரி பாதிப்பு நேற்றைய தினம் 72 ஆக குறைந்தது. திருச்சி மாவட்டத்திலும் நேற்றைய தினம் 53 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது. திருவாரூரில் 37 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 37 பேருக்கும் தொற்று உறுதியானது. மயிலாடுதுறையில் 23 பேருக்கும், கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 20-க்கு கீழும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    ஆனால் நேற்றைய தினம் ஒரே நாளில் 9 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதில் 3 பேர் நாகப்பட்டினத்திலும், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டையில் தலா இருவரும், திருச்சி, பெரம்பலூரில் தலா ஒருவரும் கொரோனா வைரசுக்கு மடிந்தனர். இறப்புகள் அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×