search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    கோவில் நிலத்தை அபகரிப்பவர்கள் மீது குண்டர் சட்டம்- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

    அறங்காவலர்களுக்கு எதிராக அறநிலையத்துறை தனது சட்டப்படி விசாரணையை தொடரலாம். அதற்கு ஏதுவாக இணை ஆணையர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.
    சென்னை:

    மயிலாப்பூர் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தானம் கோவிலின் 5 அறங்காவலர்களை தற்காலிக பதவிநீக்கம் செய்து அறநிலையத்துறை கடந்த மாதம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து, தற்காலிகமாக பதவிநீக்கம் செய்யப்பட்ட அறங்காவலர்களில் ஒருவரான ஆடிட்டர் ஸ்ரீதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    அறநிலையத்துறையால் அறங்காவலர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றக்குறிப்பாணை செல்லும். அதேநேரம் மனுதாரருக்கு எதிரான தற்காலிக பதவிநீக்க உத்தரவு மட்டும் ரத்து செய்யப்படுகிறது. மற்ற 4 பேருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பதவிநீக்க உத்தரவுக்கு ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு இடைக்கால தடை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அறங்காவலர்களுக்கு எதிராக அறநிலையத்துறை தனது சட்டப்படி விசாரணையை தொடரலாம். அதற்கு ஏதுவாக இணை ஆணையர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். விசாரணை நேர்மையாக, நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து ஆவணங்களையும் அறநிலையத்துறை அதிகாரிகள் பெறலாம்.

    இந்த விசாரணையை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக கோவில் அறங்காவலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதேசமயம், கோவில் நிலத்தை யாரேனும் சட்டவிரோதமாக அபகரித்து இருந்தால் அவர்கள் தாமாக முன்வந்து அந்த நிலங்களை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரிகைகளில் அறநிலையத்துறை விளம்பரம் வெளியிட வேண்டும்.

    மேலும் கோவில் நிலங்களை அபகரிப்பவர்கள், அபகரித்தவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தைப் பயன்படுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நிலம், சொத்து, நகைகளை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க அறநிலையத்துறை சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும். அந்த சிறப்பு பிரிவின் தொலைபேசி, செல்பேசி எண்களை அனைத்து கோவில்கள் மற்றும் அறநிலையத்துறை அலுவலகங்களில் பக்தர்களுக்கு தெரியும் விதமாக எழுதி வைத்து விளம்பரப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

    Next Story
    ×