search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    போலி முகநூல் கணக்கு தொடங்கி லண்டன் பெண் போல் பேசி வாலிபரிடம் ரூ.1.20 லட்சம் மோசடி

    போலி முகநூல் கணக்கு தொடங்கி லண்டன் பெண் போல் பேசி வாலிபரிடம் ரூ.1.20 லட்சம் மோசடி செய்த தஞ்சை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல்:

    தஞ்சாவூரை சேர்ந்தவர் ராஜன் என்ற ஆனந்தராஜன்(29). இவர் பெண் பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கி லண்டனில் வசிப்பதாக தனது பயோடேட்டாவில் குறிப்பிட்டிருந்தார். அதனை நம்பிய பலர் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த என்ஜினீயர் அருண்குமார் என்பவரும் அவருடன் முகநூல் மூலம் பழகி வந்துள்ளார். அதன்பின்னர் செல்போன் நம்பரை வாங்கி இருவரும் பேசி வந்துள்ளனர்.

    அருண்குமாரிடம் வசீகரமான குரலில் பேசி அவரை மயக்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தாயாரின் உடல்நிலை சரியில்லை எனக்கூறி தனக்கு அவசர தேவையாக ரூ.1.20 லட்சம் பணம் தேவைப்படுவதாக ஆனந்தராஜன் கூறியுள்ளார். அந்த பணத்தை தனது வங்கி கணக்கு மூலம் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார். அந்த வங்கி கணக்கின் கிளை பழனி, தஞ்சாவூர் என குறிப்பிட்டு இருந்ததையும் அருண்குமார் கவனிக்கவில்லை.

    சில நாட்கள் கழித்து அருண்குமாருடன் பேசுவதை ஆனந்த ராஜன் தவிர்த்து வந்துள்ளார். மேலும் அவரது முகநூல் கணக்கில் சந்தேகப்படும்படியான பலர் இருப்பதை பார்த்து அதனை ஆய்வு செய்தபோது அது போலியானது என கண்டறிந்தார். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட சைபர்கிரைம் போலீசாரிடம் அருண்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆனந்தராஜனை கைது செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், சைபர் கிரைம் மோசடிகளை தடுக்க பொதுமக்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எஸ்.எம்.எஸ், போலி ஷாப்பிங், வெப்சைட், ஓ.டி.பி என தொடர்ந்து பல மோசடிகள் நடந்து வருகிறது. படிக்காதவர்கள் ஏமாறுவதைவிட படித்தவர்களும் இதில் ஏமாந்து வருவது அதிகரிக்கிறது என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×