search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை தொகுதியில் 3 ஓட்டுச்சாவடிகள் இடமாற்றம்

    மடத்துக்குளம் தொகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் 287 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.
    உடுமலை:

    உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கான வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி உடுமலை தொகுதியில் கூடுதலாக ஒரு ஓட்டுச்சாவடி மற்றும் 3 இடமாற்றம், 5 பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 1, 2022ஐ தகுதி நாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகளை ஆகஸ்ட் 9 முதல் அக்டோபர் 31 வரை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்தும், 1,500 வாக்காளர்களுக்கு கூடுதலாக உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. 

    அதன் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து  பட்டியல் தயாரித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் வரைவு ஓட்டுச்சாவடிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

    இதில் உடுமலை தொகுதியில் ஏற்கனவே 293 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. வரைவு பட்டியலில் புதிதாக 1, 500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள உடுமலை நகராட்சி நெல்லுக்கடை வீதியிலுள்ள ஓட்டுச்சாவடியில் புதிதாக ஒரு ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு மொத்த ஓட்டுச்சாவடிகளில் எண்ணிக்கை 294 ஆக உயர்கிறது.

    பொள்ளாச்சி தாலுகா சூளேஸ்வரன்பட்டியிலுள்ள ஓட்டுச்சாவடி பழுதடைந்துள்ளதால் அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு மாற்றுதல், நாச்சிபாளையம் ஓட்டுச்சாவடி பழுதடைந்துள்ளதால் அருகிலுள்ள கரட்டுப்பாளையம் ஒன்றிய பள்ளிக்கு ஓட்டுச்சாவடி மாற்றுதல் என 3 ஓட்டுச்சாவடிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது.

    அதே போல் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் அமைந்துள்ள 5 ஓட்டுச்சாவடிகளின் பெயர்கள் மாற்றப்படுகிறது. மடத்துக்குளம் தொகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் 287 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. 

    இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்:

    வரைவு ஓட்டுச்சாவடிகளின் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோரிக்கை மற்றும் ஆட்சேபனை குறித்து 20-ந்தேதி வரை கோட்டாட்சியர் மற்றும் தாலுகா அலுவலகங்களில் தெரிவிக்கலாம். தொடர்ந்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு இறுதி செய்யப்படும் என்றனர்.
    Next Story
    ×