search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக-அதிமுக
    X
    திமுக-அதிமுக

    9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் தேர்வில் திமுக- அதிமுக தீவிரம்

    9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் பெரிய மாவட்டங்களாக இருந்த திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதியதாக தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் கடந்த ஆட்சியில் உருவாக்கப்பட்டன.

    மாவட்டங்கள் மறு சீரமைப்பு காரணமாக இந்த 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.

    அப்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

    இதையடுத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

    இதற்காக 9 மாவட்டங்களிலும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.

    இந்த நிலையில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.

    கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தலும், மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர், கிராம ஊராட்சித் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை கொண்டு மறைமுக தேர்தலும் நடத்தப்படுகிறது. மொத்தம் 27,003 பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

    தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் வருகிற 22-ந் தேதி ஆகும். 23-ந் தேதி வேட்பு மனு ஆய்வு நடைபெறுகிறது. 25-ந் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெறலாம்.

    முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6-ந் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு 9-ந் தேதியும் நடக்கிறது. காலி இடங்களுக்கும் 9-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 12-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் நடவடிக்கைகள் 16-ந் தேதி முடிவடைகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 20-ந் தேதி பதவி ஏற்கிறார்கள். 22-ந் தேதி மறைமுக தேர்தலுக்கான கூட்ட நாள் ஆகும்.

    9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதற்காக கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனு வாங்கும் நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளன.

    தி.மு.க. சார்பில் ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.

    காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்றே வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. சித்தாமூர், அச்சரப்பாக்கம், மதுராந்தகம், லத்தூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய இடங்களில் இன்று வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர், திருப்போரூர் காட்டாங்கொளத்தூர், புனித தோமையர் மலை, திருக்கழுகுன்றம் ஆகிய ஒன்றியங்களில் வருகிற 16-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.

    இதேபோல செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு தி.மு.க. சார்பில் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன.

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்


    பின்னர் விருப்ப மனு கொடுத்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் பிறகு தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்படும்.

    அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கும் ஏற்கனவே தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நத்தம் விசுவநாதன், சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன், ராஜலட்சுமி, இரா.கோபால கிருஷ்ணன், பி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் விருப்பமனு தொடர்பாக கட்சி தலைமை இன்று அறிவிப்பு வெளியிடுகிறது. அதன் அடிப்படையில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் விருப்ப மனு வாங்கும் பணிகளை மேற்கொள்வார்கள். அதன்பிறகு வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்.

    மேலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளின் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய இடங்கள் குறித்து, அந்தந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேசி முடிவு செய்து கட்சி தலைமைக்கு தெரிவிக்கிறார்கள். அதன் அடிப்படையில் கூட்டணி கட்சிகளுக்கும் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

    ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு சுயேட்சை சின்னமே ஒதுக்கப்படும். ஆனாலும் அதில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் வகையில் தேர்தல் பணியாற்ற தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

    Next Story
    ×