search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மெய்த்தன்மை சரிபார்ப்பு சான்றிதழ் பெற 'இ-சனத்’ இணையதளத்தை பயன்படுத்தலாம்

    வெளிநாட்டு வேலைக்கு செல்வோர், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்ட அரசுப்பணிக்கு செல்வோருக்கு சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்ப்பு சான்றிதழ் அவசியம்.
    திருப்பூர்:

    வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் பணிக்கு செல்லும் இளைஞர், இளம்பெண்கள் தங்களது கல்வி சான்றிதழ்களுக்கு அரசிடம் மெய்த்தன்மை சரிபார்ப்பு சான்று பெற வேண்டியது அவசியம். 

    குறிப்பாக வெளிநாட்டு வேலைக்கு செல்லும் போது பொதுத்துறையில் விண்ணப்பித்து சரிபார்ப்பு சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். சென்னையில் உள்ள பொதுத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு துறைவாரியான சரிபார்ப்பு நடக்கும். 

    அதற்கு பிறகு சான்றிதழ் வழங்கப்படும். இத்தகைய நடைமுறையால் உரிய காலத்திற்குள் சரிபார்ப்பு பெற முடியாமல் வெளிநாட்டு வேலை எட்டாக்கனியாக மாறிவிடுகிறது.

    ’டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தில், பல்வேறு சேவையை எளிதாக்கிய மத்திய அரசு ஒற்றைச்சாளர முறையில் சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்ப்பு செய்யும், ‘இ-சனத்’ என்ற ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்கியுள்ளது.

    இதுகுறித்து தேசிய தகவலியல் மைய பொதுமேலாளர் கண்ணன் கூறியதாவது:

    வெளிநாட்டு வேலைக்கு செல்வோர், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்ட அரசுப்பணிக்கு செல்வோருக்கு சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்ப்பு சான்றிதழ் அவசியம். 

    விண்ணப்பித்து சான்றிதழ் பெற தாமதம் ஏற்படுவதால் காகிதம் இல்லாமல் நேரில் செல்லாமல் பணம் அதிகம் செலவழிக்காமல் எளிதாக ‘ஆன்லைன்’ மூலமாக பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    ’இ-சனத்’ என்ற இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பித்து எளிய முறையில் சான்றிதழ் பெறலாம். விண்ணப்பம் செய்ததும் நேரடியாக சம்பந்தப்பட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கிடைத்துவிடும். 

    சரிபார்ப்பு அதிகாரி சரிபார்த்ததும் துணை கலெக்டர் நிலை அதிகாரி ஒப்புதல் அளித்ததும் விண்ணப்பதாரர் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

    கல்விச்சான்று மெய்த்தன்மை சான்று தேவையெனில், https://esanad.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×