search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    7 ஆண்டாக நீடிக்கும் கூலி உயர்வு பிரச்சினையால் கடனில் சிக்கி தவிக்கும் திருப்பூர் விசைத்தறி தொழிலாளர்கள் - பழைய இரும்புக்கு தறிகளை விற்கும் அவலம்

    விசைத்தறி சார்ந்த சைசிங், ஸ்பின்னிங், வீவிங் உள்ளிட்டவற்றின் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைகின்றனர்.
    திருப்பூர்;

    தொழில் வளர்ச்சி அடைந்து வரும் திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறி தொழிலும் பிரதானமானது. தமிழகம் முழுவதும் உள்ள விசைத்தறிகளில் மூன்றில் ஒரு பங்கு இங்கு உள்ளன. 

    ஒப்பந்த கூலி அடிப்படையில் துணிகள் நெசவு செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு கோடி மீட்டர் துணிகள் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.20 கோடிக்கும் அதிகமாக அரசுக்கு வருவாய் ஈட்டி தருகிறது. 

    விசைத்தறி சார்ந்த சைசிங், ஸ்பின்னிங், வீவிங் உள்ளிட்டவற்றின் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைகின்றனர். இவ்வாறு பெரும்பான்மையான தொழிலாளர்களை  கொண்ட இத்தொழில், கடந்த 7 ஆண்டாக தத்தளித்து வருகிறது. ஆனால் அரசு மனது வைத்தால், எட்டாக்கனியையும் எட்டிப்பிடிக்க முடியும் என்கின்றனர் விசைத்தறியாளர்கள்.

    இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:

    கூலியை ஆதாரமாக கொண்டே விசைத்தறி காடா உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 1992 முதல் 2014 வரை இரண்டு மாவட்ட கலெக்டர்கள் முன்னிலையில் கூலி உயர்வு ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டது. 

    2014ல் நிறைவேற்றப்பட்ட கூலி உயர்வு இன்றுவரை வழங்கப்படவில்லை. கூலி அடிப்படையில் தொழில் நடப்பதால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து உரிமையாளர்களே குடும்பத்துடன் களத்தில் இறங்கி நெசவு செய்யும் நிலை ஏற்பட்டது. 

    தொழிலாளருக்கு வேலை இழப்பு ஏற்பட்டதுடன் போதிய உற்பத்தி மேற்கொள்ள இயலாமல் தறிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். அதன் காரணமாக  உற்பத்தியும் குறைந்து வருவாயும் பாதித்தது. இதுவே விசைத்தறியாளர்கள் கடனில் மூழ்க காரணமாக அமைந்தது.

    இன்றைய சூழலில் 30 சதவீதம் வரை கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும். பெட்ரோல், டீசல், விலைவாசி உள்ளிட்ட அனைத்தும் உயர்ந்துள்ளது. ஆனால் நெசவு கூலி உயராததால் வங்கி கடன் திருப்பி செலுத்த முடியாமல் ஜப்தி ஏல நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன.

    பழைய இரும்புக்கு தறிகளை விற்று வங்கி  கடனை திருப்பி செலுத்தி விடலாம் என்று நினைத்தால் ரூ.1.50லட்சம் மதிப்பிலான தறிகளை ரூ.30 ஆயிரத்திற்கு கேட்கின்றனர். அதன் காரணமாக பரம்பரையாக நெசவு செய்து வந்த பலர் தொழிலை விட்டு சென்று விட்டனர். 

    2014ம் ஆண்டுக்கு முன் 2.50 லட்சம் தறிகள் என்றிருந்த நிலையில் தற்போது ரூ. 2 லட்சத்துக்கும் குறைவாகி உள்ளன. விசைத்தறி கூலி பிரச்சினையே இவை அனைத்துக்கும் காரணம். 7  ஆண்டாக கலெக்டர், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் கூலி உயர்வில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

    கடந்த காலங்களில் எவ்வாறு ஒப்பந்த  கூலி நிறைவேற்றப்பட்டதோ அதுபோல் கூலி உயர்வை அமல்படுத்த தீவிர நடவடிக்கை வேண்டும். தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு  கூலி உயர்வை சட்டமாக கொண்டுவர வேண்டும். 

    இல்லையெனில் எதிர்வரும் நாட்களில் எஞ்சியுள்ள தறிகளும் பழைய இரும்புக்கு செல்லும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×