search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஒரே குடும்பத்தில் டாக்டர் உள்பட 4 பேருக்கு கொரோனா

    குமரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை 11 லட்சத்தை தாண்டியது. தொடர்ந்து முன்களப்பணியாளர்களும், சுகாதாரத்துறையினரும் சளி மாதிரிகளை சேகரித்து வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடிகளிலும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நேற்று ஒரே நாளில் 3,476 பேருக்கு சோதனை மேற்கொண்டதில் 34 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 வாரமாக பாதிப்பு குறைவாக இருந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    முஞ்சிறை யூனியனில் 10 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அகஸ்தீஸ்வரத்தில் 3 பேரும், கிள்ளியூரில் ஒருவரும், குருந்தன்கோட்டில் 2 பேரும், மேல்புறத்தில் 3 பேரும், திருவட்டாரில் 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில் நகரில் ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கடந்த வாரம் தனது உறவினர் ஒருவரை சந்தித்து பேசி உள்ளார். அதன் பிறகு டாக்டருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் அவர் சந்தித்து பேசிய உறவினருக்கு தொற்று உறுதியானதால் டாக்டரும் கொரோனா சோதனை மேற்கொண்டார். இதில் டாக்டருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து டாக்டரின் மனைவி, மகன், தாயாருக்கும் சோதனை நடத்தப்பட்டது.

    இதில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து டாக்டர் உள்பட 4 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து டாக்டர் வசித்து வந்த வீடு மற்றும் தெரு முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

    டாக்டருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை 11 லட்சத்தை தாண்டியது. தொடர்ந்து முன்களப்பணியாளர்களும், சுகாதாரத்துறையினரும் சளி மாதிரிகளை சேகரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×