search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    குமரியில் புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று

    கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து எல்லைப்பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    அங்கிருந்து வருபவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 737 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் 30 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கேரளாவில் இருந்து வந்தவர் ஆவார். மேல்புறம், முஞ்சிறை தாலுகாவில் அதிக அளவு பாதிப்பு உள்ளது. மேற்புறத்தில் 3 பேரும் முன்சிறையில் 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 4 பேரும், கிள்ளியூரில்2 பேரும், குருந்தன்கோட்டில் ஒருவரும் திருவட்டாரில் 4 பேரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    நாகர்கோவில் மாநகரை பொருத்தமட்டில் 6பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 931 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 56 ஆயிரத்து 635 பேர் குணமடைந்துள்ளனர்.

    கடந்த 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. குமரி மாவட்டத்தில் 4 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 262 மாணவர்களுக்கு சோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் 9 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. தற்போது கல்லூரி மாணவர்கள் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத் திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல் 2 பள்ளி மாணவர்களும் ஒரு மாணவியும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளார். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் மாநகரில் நாளுக்கு நாள் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. கடைவீதியில் சுற்றித்திரியும் பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி முக கவசம் இன்றி சுற்றிதிரிகிறார்கள். இதனால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நேற்றும், இன்றும் சுபமுகூர்த்த தினம் என்பதால் திருமண மண்டபங்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. திருமண மண்டபம் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. திருமண விழாவிற்கு செல்லும் பொது மக்களும் கொரோனா விதிமுறையை கடைபிடிக்காமல் சுற்றி வருவதால் மீண்டும் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது. எனவே கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    Next Story
    ×