search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிபா வைரஸ்
    X
    நிபா வைரஸ்

    நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக-கேரள எல்லையில் அரசு பஸ்கள் அடியோடு நிறுத்தம்

    நோய் பரவல் காரணமாக ஏற்கனவே மாநில எல்லைகளை கடந்து வருபவர்கள் 2 முறை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே கேரளாவுக்குள் வேலைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரளாவில் கொரோனா தொற்று இன்னும் குறையாத நிலையில் நிபா வைரஸ் அம்மாநில மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் பதிவாகும் கொரோனா பாதிப்பில் 60 சதவீதம் கேரளாவில் மட்டுமே உறுதி செய்யப்படுகிறது.

    நோய் தொற்றை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்தபோதும் நோய் பரவல் குறையவில்லை. இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன் உயிரிழந்தான். அதனைத் தொடர்ந்து அவனது பெற்றோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதனால் அப்பகுதி கட்டுபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. கேரளாவில் மேலும் சிலருக்கு நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் தமிழக-கேரள எல்லையில் வாகனங்கள் வருவதற்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருந்து கம்பம் மெட்டு, போடிமெட்டு, குமுளி மலைச்சாலை வழியாக கேரளாவுக்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர தேனி மாவட்டத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் கேரளாவுக்கு காப்பி மற்றும் ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.

    நோய் பரவல் காரணமாக ஏற்கனவே மாநில எல்லைகளை கடந்து வருபவர்கள் 2 முறை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே கேரளாவுக்குள் வேலைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது நிபா வைரஸ் காரணமாக பஸ் போக்குவத்து மாநில எல்லை வரை கூட இயக்கப்படவில்லை. குறிப்பாக போடியில் இருந்து போடி மெட்டு வரை அரசு பஸ் இயக்கப்படும். அதன்பிறகு நடந்து சென்று கேரளாவுக்கு செல்பவர்கள் மாற்று பஸ்சில் ஏறி செல்வார்கள். தற்போது போடி மெட்டு வரை இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டது.

    இதேபோல 3 முக்கிய சாலைகளிலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்காக செல்லும் வாகனங்கள் மட்டும் உரிய பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றன. அந்த வாகனங்களும் கிருமிநாசினி மருந்து கொண்டு தெளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறது. மேலும் வாகனங்களில் வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பாக காணப்படும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. 24 மணி நேரமும் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையும் படியுங்கள்... அமைச்சர்களையும், அதிகாரிகளையும் நானே நேரில் கண்காணிக்க உள்ளேன்- மு.க.ஸ்டாலின் அதிரடி எச்சரிக்கை

    Next Story
    ×