search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    அனைத்து மாவட்டங்களிலும் போதுமான தடுப்பூசி தயார்- பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

    மாநிலம் முழுவதும் நாளை முகாமிற்கு தேவையான தடுப்பூசிகளை சுகாதாரத்துறை அனுப்பி வருகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழக சுகாதாரத்துறையின் மூலம் 40 ஆயிரம் மையங்களில் முகாம் நடக்கிறது.

    இதுவரையில் தடுப்பூசி போடாத தகுதியானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

    இந்த முகாம் மூலம் 20 லட்சம் பேருக்கு நாளை தடுப்பூசி போட தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட வாரியாக சுகாதாரத்துறை செய்துள்ளது.

    இந்த நிலையில் நாளை நடைபெறும் சிறப்பு முகாமிற்கு கூடுதலாக
    தடுப்பூசி
    கள் ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதினார்.

    அமைச்சர் மா சுப்பிரமணியன்

    தற்போதுள்ள தடுப்பூசிகள் போதுமானதாக இருந்தாலும் கூட முன்னெச்சரிக்கையாக கூடுதலாக இருப்பு வைக்க வேண்டும் என்ற வகையில் வலியுறுத்தப்பட்டது.

    இதற்கிடையில் மாநிலம் முழுவதும் நாளை முகாமிற்கு தேவையான தடுப்பூசிகளை சுகாதாரத்துறை அனுப்பி வருகிறது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    நாளை நடைபெறும் முகாமிற்கு தேவையான தடுப்பூசிகள் இருப்பு உள்ளன. 20 லட்சம் தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சிரஞ்சிகளும் அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதாரப் பணியாளர்கள் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றுவார்கள்.

    இந்த மெகா சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும், எந்த அளவு தேவை இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன.

    நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடைபெறுகிறது. இதுவரையில் தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    Next Story
    ×