search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லிகைப்பூ
    X
    மல்லிகைப்பூ

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மதுரை-தோவாளையில் 100 டன் பூக்கள் விற்பனை

    நாகர்கோவிலை அடுத்த தோவாளை பூ மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாளையொட்டி நேற்று பூக்கள் விற்பனை அமோகமாக நடந்தது.
    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கடந்த 3 நாட்களாக முகூர்த்த நாள் என்பதால் 200-க்கும் மேற்பட்ட திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    இதனால் மதுரையில் அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவரவர் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இதற்காக மாலைகள், உதிரிப்பூக்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வாங்குவதற்காக அனைத்து மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர்.

    மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள நிரந்தர பூ மார்க்கெட் கொரோனா கட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தில் ஒரு பகுதியில் தற்காலிக மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக சுமார் 1 ½ கோடி ரூபாய் மதிப்பிலான பூக்கள் விற்பனை ஆகியுள்ளது.

    வழக்கமாக விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை சந்தையில் சுமார் 100 டன் மலர்கள் வரை விற்பனையாகும். இதன் மூலம் ரூ 3 கோடி வரை விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் வருவாய் கிடைக்கும். ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடு காரணமாக பூ வியாபாரம் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும் இதனால் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சுமார் 1 ½ கோடி ரூபாய்க்கு மட்டுமே வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மலர் சந்தையில் கடந்த 3 நாட்களாக 50 டன் மலர்கள் மட்டுமே விற்பனையானதாக அவர்கள் தெரிவித்தனர். கட்டுப்பாடுகளை தளர்த்தி மீண்டும் நிரந்தர மார்க்கெட்டில் மலர் வியாபாரம் செய்ய மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகள், வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.

    ரோட்டோரங்களில் வியாபாரம் செய்யும் சில்லரை வியாபாரிகள் போல மொத்த வியாபாரிகள் தொழில் பாதுகாப்பின்றி வியாபாரம் செய்யும் நிலை உருவாகி உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

    மேலும் கடந்த 3 நாட்களாக மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று மீண்டும் விலை குறைந்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த விலை ஏற்ற, இறக்கத்தால் விவசாயிகள், வியாபாரிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக மலர் வணிகர் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறினார். மேலும் அவர் கூறுகையில், மலர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வாழ்வாதாரம் பெறும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள நிரந்தர மார்க்கெட் தொடர்ந்து செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும் மீண்டும் கோரிக்கை வைக்கிறோம் என்றார்.

    நாகர்கோவிலை அடுத்த தோவாளை பூ மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாளையொட்டி நேற்று பூக்கள் விற்பனை அமோகமாக நடந்தது.

    மார்க்கெட்டில் வழக்கமாக 20 டன்கள் பூக்கள் தினமும் விற்பனையாகும். பண்டிகை நாளையொட்டி நேற்று 50 டன் பூக்கள் விற்பனை ஆனது. கேரளா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் தோவாளை வந்து பூக்களை வாங்கிச் சென்றனர்.


    Next Story
    ×