search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பனியன் உற்பத்தியாளர் - தொழிற்சங்கத்தினர் இடையே 6வது சுற்று சம்பள உயர்வு பேச்சுவார்த்தையும் தோல்வி

    கடந்த 3-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தையில் 28 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்க ஆடை உற்பத்தியாளர் சங்கத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க ஆடை உற்பத்தியாளர் சங்கம் - தொழிற்சங்கத்தினரிடையே ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

    கடந்த ஆகஸ்டு 4-ந்தேதி முதல் இருதரப்பினரும் 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். தொழிற்சங்கத்தினர் 90 சதவீத சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து பேசிவருகின்றனர்.

    கடந்த 3-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தையில் 28 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்க ஆடை உற்பத்தியாளர் சங்கத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.

    6-வது சுற்று பேச்சுவார்த்தை  ஹார்வி ரோடு சிட்கோ வளாக த்தில் உள்ள ‘சைமா ‘சங்க அரங்கில் நேற்று  நடந்தது. பேச்சுவார்த்தை குழு தலைவர் துரைசாமி (ஏற்றுமதியாளர் சங்கம்) தலைமை வகித்தார்.

    உற்பத்தியாளர் சங்கங்கள் தரப்பில் ‘சைமா’ சங்க தலைவர் ஈஸ்வரன், பொதுச்செயலாளர் பொன்னுசாமி, துணை தலைவர் கோவிந்தப்பன், ஏற்றுமதியாளர் சங்க துணை தலைவர் வேலுசாமி, இணை செயலாளர் செந்தில்குமார், ‘டீமா’ தலைவர் முத்துரத்தினம், செயலாளர் செந்தில்வேல், ‘நிட்மா’ செயலாளர் ராஜாமணி, ‘சிம்கா’ தலைவர் விவேகானந்தன், ‘டெக்மா’ தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    தொழிற்சங்கங்கள் தரப்பில் ஏ.ஐ.டி.யு.சி., சேகர், இசாக், சி.ஐ.டி.யு., மூர்த்தி, சம்பத், ஐ.என்.டி.யு.சி., பெருமாள், எம்.எல்.எப்., மனோகரன், பெருமாள், அண்ணா தொழிற்சங்கம் கண்ணபிரான், விஸ்வ நாதன், பி.எம்.எஸ்., சந்தானகிருஷ்ணன், எல்.பி.எப்., ராமகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், பூபதி, எச்.எம்.எஸ்., முத்துசாமி, ஜெயராம் பங்கேற்றனர்.

    நேற்றைய பேச்சுவார்த்தையிலும், உற்பத்தியாளர் சங்கம் தரப்பினர் 28 சதவீதம் வரை மட்டுமே சம்பள உயர்வு வழங்க முடியும், அதற்குமேல் உயர்வு வழங்க முடியாது என தெரிவித்தனர்.

    தொழிற்சங்கத்தினர் இதற்கு உடன்படவில்லை. கூடுதல் சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இருதரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் நேற்றைய பேச்சுவார்த்தையிலும்  ஒப்பந்தத்துக்கான எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. வருகிற 17-ந்தேதி, 7-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×