search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம் ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களின் வசதிக்காக தொடங்கப்பட்டுள்ள பேட்டரி கார் சேவை
    X
    விழுப்புரம் ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களின் வசதிக்காக தொடங்கப்பட்டுள்ள பேட்டரி கார் சேவை

    விழுப்புரம் ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களின் வசதிக்காக பேட்டரி கார் வசதி

    விழுப்புரம் ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களின் வசதிக்காக பேட்டரி கார் வசதி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் மாற்றுத்திறனாளிகளும், முதியோர்களும் அதிகளவில் ரெயில் பயணம் செய்கின்றனர். இவர்கள் ரெயில் நிலையத்தின் நடைமேடைகளுக்கு படிக்கட்டு வழியாக ஏறிச்செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். எனவே ரெயில் நிலையத்தில் பேட்டரி கார் வசதி செய்து தர வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், ரெயில்வே பயணிகள் சங்கத்தினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்காக மாற்றுத்திறனாளிகளும் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தினர்.

    இவர்களின் கோரிக்கையை ஏற்ற ரெயில்வே நிர்வாகம் தற்போது விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு மாற்றுத்திறனாளிகள், முதியோர்களின் வசதிக்காக பேட்டரியால் இயங்கும் காரை வழங்கியுள்ளது. இந்த பேட்டரி கார், விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு இதன் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி காரில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சிரமமின்றி ஏறி தாங்கள் செல்ல வேண்டிய நடைமேடைக்கு எளிதாக சென்று ரெயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம் ரெயில் நிலையத்தின் நுழைவுவாயில் பகுதியில் இருந்து இங்குள்ள 6 நடைமேடைகள் வரை மாற்றுத்திறனாளிகள், முதியோர்களை ஏற்றிச்சென்று விடுவதற்காக பேட்டரி கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அவர்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். இப்பேட்டரி காரில் ஒரே நேரத்தில் 4 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சேவை 24 மணி நேரமும் இயங்கும் என்றனர்.
    Next Story
    ×