search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத 4 அரசு பள்ளிகளுக்கு நோட்டீஸ்

    தனியார் பள்ளிகளில் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்காவிட்டால் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில், கீழக்கரையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேருக்கும், ஒரு ஊழியருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர், நண்பர்கள் என 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், ராமநாதபுரம் அருகே உள்ள ரகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், ஒரு மாணவருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாணவர் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அவர் இருந்த வகுப்பறையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

    இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) சத்தியமூர்த்தி கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளில் கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான நிலையான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதில் தொண்டி, திருவாடானை ஆண், பெண் அரசு மேல்நிலைப்பள்ளிகள், திருப்பாலைக்குடி அரசுப்பள்ளி ஆகியவற்றில் கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்று தெரியவந்தது.

    முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியுடன் மாணவ, மாணவிகளை அமரவைத்தல் ஆகிய விதிமுறைகளை கூட கடைப்பிடிக்கவில்லை என்பதால் குறிப்பிட்ட அந்த 4 பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இருந்தும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

    தனியார் பள்ளிகளில் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்காவிட்டால் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×