search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் மா. சுப்பிரமணியன்
    X
    அமைச்சர் மா. சுப்பிரமணியன்

    தமிழகத்துக்கு கூடுதலாக 1 கோடி தடுப்பூசி தர வேண்டும்- மத்திய அரசுக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்

    தமிழகத்தில் 12-ந்தேதி ‘மெகா’ தடுப்பூசி முகாம் 10 ஆயிரம் இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் சாலையோர பூங்கா பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாலையோர பூங்கா அமைக்கக்கூடிய இந்த பகுதி சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி இருந்தது. அதனை பூங்காவாக மாற்ற முடிவு செய்யப்பட்டு அந்த பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    86 அடி நீளம், 6½ அடி அகலத்தில் இந்த பூங்கா அமைகிறது. 1½ மாதத்தில் இந்த பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

    தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. முதல் தவணை தடுப்பூசி 44 சதவீத பேருக்கு போடப்பட்டுள்ளது. 2-வது தவணை 12 சதவீத பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

    ஒட்டு மொத்தமாக 3 கோடியே 59 லட்சத்து 31 ஆயிரத்து 627 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 22 லட்சத்து 16 ஆயிரத்து 160 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தற்போது தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பு இல்லை.

    தமிழகத்தில் வருகிற 12-ந்தேதி 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதனால் கூடுதல் தடுப்பூசி தர வேண்டும் என்று கூறி வருகிறோம். 12-ந்தேதி நடக்கும் சிறப்பு முகாமில் தடுப்பூசி போடுவதற்கு தற்போதைய நிலவரப்படி தடுப்பூசி போதாது.

    திட்டமிட்டப்படி 10 ஆயிரம் முகாம்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவோம் என்ற நிலைப்பாட்டுடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    சமூக நலத்துறை, பள்ளி கல்வித்துறை ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் இது நடைபெறுகிறது. மேலும் கேரள எல்லையை ஒட்டிய 9 மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போட திட்டமிட்டு இருப்பதால் கூடுதல் தடுப்பூசியை விரைந்து அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    அந்த 9 மாவட்டங்களுக்கு மட்டும் 1000 சிறப்பு முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ்


    பள்ளி மாணவர், ஆசிரியர்களுக்கு தொற்று பரவுவதை கண்காணித்து வருகிறோம். பாதிப்பு ஏற்படுகின்ற பகுதிகளில் உடனடியாக தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

    பள்ளிகளில் ரேண்டமாக பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளோம். கல்லூரியில் முதலாம் ஆண்டு சேரக்கூடிய 17, 18 வயதுள்ள மாணவர்களுக்கு குழந்தைகளுக்கு போடும் தடுப்பூசி போடலாமா? என மத்திய அரசிடம் ஆலோசித்து வருகிறோம்.

    தமிழகத்தில் போலி மருத்துவர்களுக்கு அனுமதி இல்லை. போலி மருத்துவம், போலி மருந்து இவற்றுக்கும் அனுமதி கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் 12-ந்தேதி ‘மெகா’ தடுப்பூசி
    முகாம் 10 ஆயிரம் இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதனால் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியானவர்கள் தடுப்பூசி போடாதவர்களுக்கு இந்த முகாமில் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தற்போது தமிழகத்தில் தினமும் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதனால் தற்போதைய தடுப்பூசி அளவு போதாது.

    எனவே கூடுதலாக 1 கோடி தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும். இந்த மாதத்திற்கான ஒதுக்கீட்டு அளவான ஒரு கோடியே 4 லட்சம் தவிர இதனை கூடுதலாக ஒதுக்கி தர வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×