search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் பிகே சேகர்பாபு
    X
    அமைச்சர் பிகே சேகர்பாபு

    கோவிலில் மொட்டை போடும் பணியாளர்கள் 1,749 பேருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை

    பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிய பிறகு, அந்த ஆண்டவனுக்கு உயிரை கொடுப்பது போல் தங்களது தலைமுடியை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று தி.மு.க. உறுப்பினர் நந்தகுமார் பேசும்போது, கோவில்களில் மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற முதல்- அமைச்சரின் அற்புதமான திட்டம் பக்தர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மொட்டை அடிக்க இலவசம் என்பதால் இந்த பணியில் ஈடுபடும் பணியாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உண்மையா? என்றார்.

    இதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்து கூறியதாவது:-

    ‘மொட்டைக்கு இனி இல்லை கட்டணம்’ என்ற அறிவிப்பு பக்த கோடிகளின் உள்ளம் எல்லாம் பூத்து குலுங்குவதை யாரும் அறியாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் இதைகூட சில அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்வதாக தெரிகிறது.

    மொட்டை அடிப்பதற்கு பல இடங்களில் 500 ரூபாய், 1000 ரூபாய் கேட்கும் நிலை இருந்தது. பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிய பிறகு, அந்த ஆண்டவனுக்கு உயிரை கொடுப்பது போல் தங்களது தலைமுடியை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

    இப்படி ஏழை, எளியவர்கள் கூட அதிக அளவில் வேண்டுதலை நிறைவேற்றுவதை நாம் அனைவரும் அறிவோம். இதை அறிந்த முதல்-அமைச்சர் சம்பந்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் ‘மொட்டைக்கு இனி இல்லை கட்டணம்’ என்ற அறிவிப்பை வெளியிட செய்தார்.

    அதோடு மட்டுமல்லாமல் மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் எதுவும் இல்லை. அவர்களுக்கு திருக்கோவில் சார்பில் எந்தவித வருமானமும் வழங்கப்படுவது இல்லை. ரூ.5 லிருந்து ரூ.25 வரை மொட்டை அடிப்பவர்களுக்கு ரசீது போல் தந்து, அவை கோவில்களிலேயே அவர்கள் பணமாக பெறுவது வழக்கம்.

    ஆனாலும் பல கோவில்களில் அவர்களுக்கு போதுமான வருமானம் இல்லை என்பதால், ரூ.5லிருந்து ரூ.25 என்பதை மாற்றி யார் மொட்டை அடித்தாலும் அந்த மொட்டைக்குரிய கட்டணமாக 30 ரூபாயை திருக்கோவில் சார்பில் செலுத்த சொன்னார்கள்.

    30 ரூபாயும் நேற்று முன்தினத்தில் இருந்து திருக்கோவில் சார்பில் செலுத்தப்பட்டு வருகிறது. அதுவும் போதவில்லை, நாங்கள் ஏற்கனவே இனாமாக 5 ரூபாய், 10 ரூபாய் வாங்கி கொண்டு இருந்தோம். அதுவும் தடைபட்டு விட்டது என்பதை எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தார்கள்.

    உடனே இதுபற்றி நாங்கள் முதல்-அமைச்சரோடு கலந்து ஆலோசித்தோம். இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருக்கோவில்களில் மொட்டை போடும் 1,749 பணியாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க அறிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×