search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மற்றும் அவரிடம் படித்த மாணவர்கள்
    X
    நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மற்றும் அவரிடம் படித்த மாணவர்கள்

    நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்... 30 ஆண்டுக்குப் பின் சந்தித்த மாணவர்கள்- சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்

    செல்போன் என்பதை வெறுமனே தகவல் தொடர்பு சாதனமாக மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று நல்லாசிரியர் விருது பெற்றுள்ள தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் கூறினார்.
    சென்னை:

    கே.சி.சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் ராஜேந்திரன். அவர் ஆசிரியராக இருந்தபோது பல மாணவர்களுக்கு ஆதர்ச நாயகனாக இருந்துள்ளார். இந்நிலையில் அவரிடம் கல்விகற்ற முன்னாள் மாணவர்கள் தற்போது, ஆசிரியர் தினத்தையொட்டி 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து ஆசி பெற்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஆசிரியர் பணியில் சேவையாற்றி தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ள ராஜேந்திரனை மாலை மலர் இணையதளம் சார்பாக தொடர்பு கொண்டோம்.

    அவரிடம், நல்லாசிரியர் விருது வாங்கியது குறித்தும் முன்னாள் மாணவர்கள் சந்தித்து ஆசி பெற்றது குறித்தும் கேட்டோம்,

    "நான் நல்லாசிரியர் விருது வாங்கியது 2017ம் ஆண்டில். நான் ஆசிரியராக பணியில் சேர்ந்தபோதும் சரி, நான் விருது வாங்கியபோதும் சரி, இப்போதும் சரி, இந்த மாணவர்கள் என்னிடம் மிகவும் பாசத்துடன்தான் உள்ளனர். அதற்கு காரணம், நான் முதன்முதலில் ஆங்கிலப் பாடம் எடுத்தது அவர்களுக்குத்தான்.

    அன்றைய காலக்கட்டத்தில் மற்ற ஆசிரியர்கள் மிகவும் கறார் தன்மையுடன் பாடங்களை கற்றுத்தந்தபோது, நான் அவர்களிடம் பரிவுடன் நடந்து கொண்டேன்.

    நான் 1989ஆம் ஆண்டு ஆங்கிலப் பாடம் எடுத்தது இந்த மாணவர்களுக்குத் தான். அதைத் தொடர்ந்து பல்வேறு அனுபவங்களுக்குப் பின்னர் தற்போது தலைமை ஆசிரியராக அதே பள்ளியில் இருக்கிறேன்" என்று தன் கடந்த காலத்தைப் பற்றி ஆர்வத்துடன் நினைவுகூர்ந்தார்.

    அவரிடம் தொடர்ந்து தற்போதைய சூழலில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கேள்வி எழுப்பினோம்.

    அதற்கு அவர், "30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மாணவர்கள் நிலை வேறு, இப்போது நிலைமை வேறு. மாணவர்களுக்கு இப்போது அதிக விஷயங்கள் தெரிகிறது. பல்வேறு விஷயங்களை அவர்கள் எளிதில் அறிந்து கொள்கிறார்கள். அந்த மாணவர்களின் அறிவுக்கு ஏற்ற ஆசிரியர்கள் இப்போது மிகக் குறைவாக உள்ளார்கள். மாணவர்களுக்குக் கற்றுத்தரும் அளவுக்கு ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

    மேலும், செல்போன் மூலம் மாணவர்கள் அதிகமாக கவனச் சிதறல்களுக்கு உள்ளாகின்றனர். செல்போன் என்பதை வெறுமனே தகவல் தொடர்பு சாதனமாக மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்பது என் கருத்து" என்று தீர்க்கமாக பதில் அளித்தார்.
    Next Story
    ×