search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பழங்கரை ஊராட்சியை திருமுருகன்பூண்டி நகராட்சியுடன் இணைத்தால் போராட்டம் - பொதுமக்கள் அறிவிப்பு

    பழங்கரை 100 நாள் திட்ட தொழிலாளர்கள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகை ஏந்தியபடி கூட்ட அரங்கிற்கு ஊர்வலமாக வந்தனர்.
    அவிநாசி:

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துதல், பழங்கரை ஊராட்சியை அதனுடன் இணைத்தல் தொடர்பான விளக்கம் மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் அவிநாசியில் நடந்தது. நகராட்சி நிர்வாக மண்டல செயற்பொறியாளர் முருகேசன் வரவேற்றார். கலெக்டர் வினீத் பேசினார். 

    கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

    காங்கயம் நகராட்சி கமிஷனர் முத்துக்குமார் பேசுகையில், நகராட்சி அமைப்பில் நகரமைப்பு பிரிவு, வருவாய், சுகாதாரம், பொறியியல் பிரிவு என பல பிரிவுகள் இருக்கும். சாலை, குடிநீர், தூய்மைப்பணி உள்ளிட்ட அடிப்படை வசதி உடனுக்குடன் செய்து கொடுக்கப்படும் என்றார். 

    இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலர் ரவி பேசுகையில், அவிநாசியையும் நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். பழங்கரை ஊராட்சியை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை அவிநாசியுடனும், மற்றொரு பகுதியை பூண்டியுடனும் இணைக்க வேண்டும் என்றார்.

    பழங்கரை ஊராட்சி உறுப்பினர் சண்முகம் பேசுகையில், பழங்கரையை நகராட்சியுடன் இணைக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. மக்களின் தண்ணீர் தேவை மேம்படும் என்றார்.

    சமூக ஆர்வலர் திருநாவுக்கரசு பேசுகையில், பழங்கரை ஊராட்சி பெரியாயிபாளையத்தை  தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்றார்.

    அவிநாசி ஒன்றியக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் கூறுகையில், பழங்கரை ஊராட்சியில் 100 நாள் திட்டத்தை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. பல்வேறு அரசு அலுவலகங்களும் அவிநாசியில் தான் உள்ளது. பழங்கரை ஊராட்சியை இரண்டாக பிரிக்கலாம். பூண்டி நகராட்சியுடன் இணைத்தால் போராட்டம் நடத்துவோம் என்றார்.

    பல்வேறு தரப்பினரும் பழங்கரை ஊராட்சியை திருமுருகன்பூண்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவிநாசி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அதனுடன் பழங்கரை ஊராட்சியை இணைக்க வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தனர்.

    பழங்கரை 100 நாள் திட்ட தொழிலாளர்கள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகை ஏந்திய படி  கூட்ட அரங்கிற்கு ஊர்வலமாக வந்தனர்.

    கலெக்டர் வினீத் பேசுகையில், திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு கிடைக்கும் பலன்கள் அனைத்தும் பழங்கரை ஊராட்சிக்கும் கிடைக்கும். இலவச வீட்டுமனைப்பட்டா, 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் போன்றவை ரத்தாகும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. இவை நகர்ப்புறங்களுக்கு ஏற்ப வேறு பெயரில் நடைமுறைக்கு வரும் என்றார்.
    Next Story
    ×