search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் மா சுப்பிரமணியன்
    X
    அமைச்சர் மா சுப்பிரமணியன்

    கேரளாவை ஒட்டிய 9 மாவட்டங்களில் பரிசோதனை தீவிரப்படுத்தப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    தடுப்பூசி போடாத மாணவர்கள், ஆசிரியர்கள் இருந்தால் 12-ந் தேதி நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில் போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
    சென்னை:

    சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடந்தது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

    பள்ளி, கல்லூரிகள் கடந்த 1-ந் தேதி தொடங்கப்பட்டதை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

    18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 112 கல்லூரிகளில் தடுப்பூசி முகாம்கள் நடந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் எல்லா கல்லூரிகளிலும் இந்த பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மாணவர்கள், பேராசிரியர்கள், களப்பணியாளர்கள், ஊழியர்கள் அனைவரும் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களும் தடுப்பூசி போடுகிறார்களா என்பதை நிர்வாகம் ஆய்வு செய்கிறது. இது முன்மாதிரியான நடவடிக்கை. வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் தடுப்பூசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் 10 ஆயிரம் முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கேரளா எல்லையை ஒட்டியுள்ள 9 மாவட்டங்களில் கூடுதலான முகாம்கள் நடத்தி பரிசோதனையை தீவிரப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலையில் இருந்து இரவு வரை நடைபெறும் இந்த முகாம்களை நான் நேரில் சென்று பார்வையிடுகிறேன்.

    ஆசிரியர்கள் தேர்தல் பணியிலும், பேரிடர் காலத்திலும் கல்விப்பணியை கடந்து பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில் தடுப்பூசி போடும் பணியிலும் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

    இதுவரையில் தடுப்பூசி போடாத மாணவர்கள், ஆசிரியர்கள் இருந்தால் 12-ந் தேதி நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில் போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்.

    தமிழகத்திற்கு நேற்று ஒரே நாளில் 19 லட்சத்து 22 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதன் அடிப்படையில் தற்போது அதிகளவு தடுப்பூசிகள் வருகின்றன.

    30 லட்சத்து 40 ஆயிரம் தடுப்பூசிகள் தற்போது இருப்பு உள்ளன. தினமும் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் 42 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி

    அகில இந்திய அளவில் சென்னை மாநகராட்சி இதில் முதல் இடம் பிடித்துள்ளது. முதல் தவணையை 29 லட்சம் பேரும், 2-வது தவணையை 13 லட்சத்து 42 ஆயிரம் பேரும் செலுத்தி உள்ளனர்.

    ஆசிரியர்கள் 7 ஆயிரம் பேர், மாற்றுத்திறனாளிகள் 147 பேர், கல்லூரி மாணவர்கள் 3,069 பேர், கர்ப்பிணி தாய்மார்கள் 21 ஆயிரம் பேர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 1 லட்சத்து 72 ஆயிரம் பேர் சென்னையில்
    தடுப்பூசி
    போட்டுள்ளனர்.

    பள்ளிகளில் தொற்று பரவாமல் தடுக்க கண்காணிக்கப்படுகிறது. தொற்று பரவிய பள்ளிகளில் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதிகமாக பாதிப்பு உள்ள பகுதிகள் ஆய்வுக்குட்படுத்தப்படும்.

    கேரளாவை ஒட்டிய எல்லைகளில் பரிசோதனைகள் முழுமையாக செய்யப்பட்டு வருகிறது. கேரள எல்லைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை. ரெயில், விமானம், தரை மார்க்கமாக தமிழகம் வருபவர்களுக்கு கட்டாயம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படும். அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணத்தை காண்பிக்க வேண்டும். கேரளா எல்லை பகுதிகளில் நிபா காய்ச்சல் பரிசோதனை முகாம்களும் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல். ஏ.க்கள் ஜெ.கருணாநிதி, த.வேலு, துணை ஆணையர் சரண்யா அரி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம், கல்லூரி செயலாளர் கே.எஸ்.பபாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×