search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெறிச்சோடிய சாலை
    X
    வெறிச்சோடிய சாலை

    மெரினா கடற்கரைக்கு செல்ல இன்று தடை- பொதுமக்கள் ஏமாற்றம்

    உழைப்பாளர் சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரையில் உள்ள அனைத்து நுழைவு பகுதிகளும் இரும்பு வேலியால் சீல் வைக்கப்பட்டன. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் ஊரடங்கு படிப்படியாக தளர்வு செய்யப்பட்டது.

    பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், கடற்கரைகள், சினிமா தியேட்டர்கள் போன்ற பொதுமக்கள் கூடுகின்ற இடங்களை திறக்க அனுமதிக்கப்பட்டது. இதனால் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் மக்கள் அதிகளவில் கூடத்தொடங்கினார்கள்.

    சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் மக்கள் பெருமளவில் கூடினார்கள்.

    வார நாட்களை விட கடந்த ஞாயிற்றுக்கிழமை மெரினாவில் சமூக இடைவெளியின்றி பல ஆயிரக்கணக்கானோர் கூடியதால் நோய் தொற்று மீண்டும் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை கருதியது.

    பொதுமக்கள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி கடற்கரை பகுதி முழுவதும் சூழ்ந்து இருந்ததால் முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் மெரினாவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் மற்ற நாட்களில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்ததால் தினமும் மெரினா கடற்கரைக்கு சென்று வருகிறார்கள்.

    பொதுவாக மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமையில் கூட்டம் அதிகமாக கூடுவதை தடுக்க இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இன்று செயல்பாட்டுக்கு வந்துள்ள கடற்கரை தடை உத்தரவால் மெரினா வெறிச்சோடி காணப்பட்டது.

    கடற்கரை பகுதியில் காலையிலேயே நடை பயிற்சி செல்ல அனுமதிக்கப்படவில்லை. காமராஜர் சாலை நடைபாதையில் நடந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் நடைபயிற்சி செல்லக் கூடியவர்கள் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை மற்றும் உட்பகுதிக்கு செல்ல முடியவில்லை. அனைத்து பகுதி நுழைவு வாயிலும் தடுப்பு வேலிகள் கொண்டு மூடப்பட்டு இருந்தன.

    கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்

    உழைப்பாளர் சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரையில் உள்ள அனைத்து நுழைவு பகுதிகளும் இரும்பு வேலியால் சீல் வைக்கப்பட்டன. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    காந்தி சிலை, கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அந்த வழியாக பொதுமக்கள் உள்ளே சென்று விட முடியாத அளவுக்கு தடுப்பு வேலிகள் வைத்து இருந்தனர்.

    ஆனாலும் கடற்கரை பகுதிக்கு காலையிலேயே பொதுமக்கள் வரத் தொடங்கினார்கள். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்கள். பிற்பகல் 2 மணிக்கு மேல் கூட்டம் மேலும் அதிகரித்தது.

    இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் மெரினா கடற்கரை சாலைகளில் குடும்பமாக சென்றார்கள். போலீசார் அவர்களிடம் இன்று அனுமதி இல்லை என்று கூறி திருப்பி அனுப்பினார்கள். இதனால் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.

    ஒரு சிலர் மெரினா கடற்கரை தடை உத்தரவு தெரியாமல் வழக்கம் போல கடற்கரைக்கு வந்தனர். இளம் தம்பதியர்களும் இருசக்கர வாகனங்களில் அணிவகுத்தனர். யாரையும் போலீசார் உள்ளே அனுமதிக்காததால் திரும்பி சென்றனர்.

    மாலையில் மெரினா கடற்கரைக்கு செல்லும் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலர் கடற்கரை சூழல் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கவும் வாகனங்களில் செல்கிறார்கள்.

    இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் மெரினா சாலையில் சுற்றி வலம் வந்தார்கள். உள்ளே நுழைய முடியாமல் திரும்பி சென்றனர்.

    நம்ம சென்னை

    சென்னையின் அடையாளமான ‘நம்ம சென்னை’ முன்பு செல்பி எடுப்பதற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வந்த நிலையில் இன்று அந்த இடமும் தடை செய்யப்பட்டு இருந்தது. இதுவும் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் அளித்தது.

    மெரினா கடற்கரை பகுதி தடை செய்யப்பட்டு இருந்தாலும் பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் பகுதியில் மீன் வாங்குவதற்கு பொது மக்கள் திரண்டனர். அந்த பகுதி வழியாக கடற்கரைக்குள் நுழைந்துவிடாத படி போலீசார் கண்காணித்தனர்.


    Next Story
    ×