search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் சேகர்பாபு
    X
    அமைச்சர் சேகர்பாபு

    விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்?- அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

    கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    கொரோனா பரவல் காரணமாக 2-வது ஆண்டாக விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகளை வைப்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    பாஜக

    தமிழக பா.ஜனதா கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளும் சிலைகளை வைத்து வழிபடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் தமிழக சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.

    இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி (பா.ஜனதா) பேசியதாவது:-

    குமரி மாவட்டம் கோவில்களின் நகரமாக உள்ளது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வருங்காலங்களில் தீ விபத்துகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆகம விதிகளுக்கு உட்பட்டு அந்த கோவிலை கருங்கல்லால் புனரமைக்க வேண்டும்.

    கோவில்களில் இந்து மதத்தினரை மட்டுமே பணியாளர்களாக அமர்த்த வேண்டும். அர்ச்சனை டிக்கெட் கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்கிற நடவடிக்கைகளை விஷ்வ இந்து பரி‌ஷத் அமைப்பு ஏற்கனவே செய்து வருகிறது. இந்துக்களின் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனை இந்த அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு குறுக்கிட்டு விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது:-

    கொரோனா நோய் ஆட்கொல்லி நோயாக இருப்பதால் வருமுன் காப்பது தான் சிறந்தது எனக்கருதி முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

    மேலும் மத்திய அரசின் உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையிலே தமிழ்நாட்டில்
    விநாயகர் சதுர்த்தி
    உள்ளிட்ட திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதன் காரணமாகவே விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    கொரோனா பரவல் முடிவுக்கு வராத நிலையில் இந்த கட்டுப்பாடுகளை நாம் பின்பற்றித்தான் ஆக வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு பேசினார்.

    இதன் பிறகு சபைக்கு வெளியே பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறும்போது, “விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட இந்துக்களின் விழாக்களுக்கு தடை விதிக்கக் கூடாது என்று பா.ஜனதா உறுப்பினர் எம்.ஆர்.காந்தி சபையில் வலியுறுத்தினார். அதற்கு அமைச்சரும் விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழக அரசு
    விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்காமல் அதனை கொண்டாட அனுமதிக்க வேண்டும்” என்றார்.

    அப்போது பா.ஜனதா உறுப்பினர் எம்.ஆர்.காந்தி அருகில் இருந்தார்.


    Next Story
    ×