search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.எம்.அப்துல்லா
    X
    எம்.எம்.அப்துல்லா

    மாநிலங்களவை எம்.பி.யாக திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வு

    மாநிலங்களவை உறுப்பினராக எம்.எம்.அப்துல்லா தேர்வு செய்யப்பட்டதால் மாநிலங்களவையில் திமுகவின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது.
    சென்னை:

    மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த ராணிப்பேட்டை முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது பதவிக்காலம் 2025 ஜூலை 24 வரை இருந்ததால் அந்த இடத்துக்கு தமிழகத்தில் இருந்து வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

    அதன்படி செப்டம்பர் 13-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், போட்டி இருக்கும் பட்சத்தில் செப்டம்பர் 13-ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தி.மு.க. சார்பில் எம்.எம்.அப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். சுயேட்சையாக 3 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது, திமுக வேட்பாளர் அப்துல்லா தவிர மற்ற மூவரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 

    தமிழக சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில் 118 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள்தான் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியும். அந்த வகையில் தி.மு.க.வுக்கு மட்டும் மெஜாரிட்டியாக 125 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் தி.மு.க. வேட்பாளரே வெற்றி பெறுவார் என்ற நிலை இருந்தது. 

    வேறு யாரும் களத்தில் இல்லாத நிலையில், திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை தேர்தல் அதிகாரி சீனிவாசன் இன்று அறிவித்தார். எம்.எம்.அப்துல்லா எம்பி ஆனதால் மாநிலங்களவையில் திமுகவின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது. அப்துல்லா 2025 ஜூலை 24 வரை எம்பியாக செயல்படுவார்.

    அ.தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம் ஆகிய 2 பேரும் எம்.எல்.ஏ.க்கள் ஆனதால் தங்களின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருந்தனர். இந்த 2 எம்.பி. பதவிகளுக்கான இடங்களுக்கு இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
    Next Story
    ×