search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிச்சம்பாளையம் அரசு பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்கியதால் தவித்த ஆசிரியைகள்-மாணவிகள்.
    X
    பிச்சம்பாளையம் அரசு பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்கியதால் தவித்த ஆசிரியைகள்-மாணவிகள்.

    திருப்பூரில் கொட்டி தீர்த்த மழையால் சிக்கி தவித்த பொதுமக்கள்

    சுமார் ஒரு மணி நேரமாக மழை நீடித்தது. இந்த மழையின் காரணமாக மாநகரின் முக்கிய ரோடுகளில் மழைவெள்ளம் பாய்ந்தோடியது.
    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மதியம் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை லேசான வெயில் இருந்து வந்தது. இதற்கிடையே மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    திடீரென மாலை 5 மணி அளவில் கனமழை கொட்டித்தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரமாக மழை நீடித்தது. இந்த மழையின் காரணமாக மாநகரில் குமரன் ரோடு, தாராபுரம் ரோடு, காங்கேயம் ரோடு, மங்கலம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, பி.என்.ரோடு உள்ளிட்ட முக்கிய ரோடுகளில் மழைவெள்ளம் பாய்ந்தோடியது.

    மாலை நேரம் என்பதால் அலுவலக பணி முடிந்தவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு சென்றனர். ஏற்கனவே மாநகரில் பல பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டிபோடப்பட்ட நிலையில் இந்த மழையின் காரணமாக அந்த சாலைகள் சேறும், சகதியுமாக காணப்பட்டன.

    வாகன ஓட்டிகள் இதனை கடந்து செல்ல மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். 
    இதுபோல் ஈஸ்வரன் கோவில் வீதி பாலம், புதிய பஸ் நிலையம் அருகே நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழைவெள்ளம் சாலைகளில் பாய்ந்தோடியது. மேலும்  60 அடி ரோடு அருகே உள்ள நிறுவனங்கள் சிலவற்றையும் மழை வெள்ளம் சூழ்ந்தது.

    நெசவாளர் காலனியில் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி  வகுப்பறைகளுக்குள் வெள்ளநீர் மற்றும் அந்த பகுதியில் உள்ள சாக்கடை கழிவுநீர் புகுந்தது. ஆசிரியர்கள் அறைகளிலும் மழைநீர் புகுந்ததால் ஆசிரியர்கள் பலர் அவதியடைந்தனர்.

    நல்லாத்துப்பாளையம் அருகே ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதால் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் நடமாட முடியாமல் அவதிப்பட்டனர். சிலரது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் தண்ணீரை வெளியேற்றினர்.

    மழை காலங்களில் அடிக்கடி கரை உடைப்பு ஏற்படுவதால், கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இன்று மதியமும் திருப்பூரில் பல இடங்களில் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ஏற்கனவே 2 நாட்களாக பெய்த மழையால் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு  சிதலமடைந்துள்ளது. சில இடங்களில் தேங்கிய தண்ணீர் வடியாமல் உள்ளது.  இந்தநிலையில் இன்றும் மழை பெய்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

    Next Story
    ×