search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி வகுப்பறையில் மாணவிகளுக்கு ஆசிரியை பாடம் எடுத்த காட்சி
    X
    பள்ளி வகுப்பறையில் மாணவிகளுக்கு ஆசிரியை பாடம் எடுத்த காட்சி

    பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது குறித்து மாணவ-மாணவிகள் கருத்து

    சக நண்பர்களையும், ஆசிரியர்களையும் மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி என்று பள்ளி மாணவி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பள்ளி-கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் திறக்கப்பட்டது குறித்து மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர். இதன் விவரம் வருமாறு:-

    பள்ளி மாணவி சரண்ஸ்ரீ:-

    பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது நண்பர்கள், ஆசிரியர்களை மீண்டும் சந்திப்பதில் மனம் சந்தோஷம் அடைகிறது. நேரடி வகுப்புகள் மீண்டும் முன்னெடுக்கப்படுவதால் மாணவர்களின் கல்வி நிலை இனி உயரும். நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு திரும்பியிருப்பது உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

    பள்ளி மாணவர்களான சகோதரர்கள் ஏ.ஹரி, ஏ.சிவா:-

    தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கூடத்தை மீண்டும் அடைந்திருப்பது புது அனுபவத்தை ஏற்படுத்துகிறது. ஆன்-லைன் வகுப்புக்கு விடை கொடுத்து, முன்புபோலவே நேரடி வகுப்பில் அமருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நேரடி வகுப்புகள் மட்டுமே பாடம் சார்ந்த தெளிவான மனநிலையை ஏற்படுத்துகிறது.

    12-ம் வகுப்பு மாணவி காயத்ரி:-

    பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது சந்தோஷம் தான். ஆசிரியர்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கு நேரடி வகுப்புகள் தான் சிறந்தது. இவ்வளவு நாட்கள் வீட்டில் இருந்தது வெறுப்பாகி விட்டது. சக நண்பர்களையும், ஆசிரியர்களையும் மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி.

    கல்லூரி மாணவி ஆர்.செந்தமிழ் செல்வி:-

    5 மாதங்களுக்கு பிறகு கல்லூரி திறக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இணைய சேவை பாதிப்பு, மின்தடை என ஆன்-லைன் வகுப்பில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. இனி அந்த பிரச்சினை இருக்காது என்பதில் சந்தோஷமே...

    கல்லூரி மாணவி பி.ருத்ரவாணி:-

    நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சக நண்பர்களையும், பேராசிரியர்களையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நேரடி வகுப்புக்கு மீண்டும் திரும்பியிருப்பது புதிய அனுபவத்தை தருகிறது. ஆன்-லைன் வகுப்பை விட நேரடி வகுப்பு தான் சிறந்தது. பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டறிந்து தெளிவுபெறலாம்.

    மாணவிகள்

    என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் டி.ரஞ்சித்:-

    என்ஜினீயரிங் கல்வியில் ஆய்வக செயல்பாடு மிகவும் முக்கியம். ஆன்-லைன் வகுப்பில் அது சாத்தியமில்லை. தற்போது மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டிருப்பதால் முன்புபோல இனி ஆய்வக பயிற்சியில் ஈடுபடலாம்.

    என்ஜினீயரிங் கல்லூரி மாணவி வி.காவ்யா:-

    இத்தனை நாட்களாக வீட்டிலேயே இருந்துவிட்டேன். எனவே கல்லூரியில் நேரடி வகுப்புக்கு உடனடியாக வருவதற்கு மனமும், உடலும் ஒத்துழைக்க மறுக்கிறது. சில நாட்கள் கடந்தால் சாதாரண மனநிலைக்கு வந்துவிடுவேன். நண்பர்களை மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சி.

    12-ம் வகுப்பு மாணவியின் தாய் ஜமுனா:-

    பயத்துடன் தான் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பி இருக்கிறேன். அடுத்த தலைமுறைக்கு கல்வி அவசியம் தான். ஆனால் பிள்ளைகளின் பாதுகாப்பு அதைவிட அவசியம். பள்ளிகள் அந்த பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.


    Next Story
    ×