search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கிராம நிர்வாக அதிகாரியை பணி நீக்கம் செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    கிராம உதவியாளர் முத்துச்சாமி, கோபாலசாமி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானது.
    அவினாசி:

    கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த  விவசாயி கோபால்சாமி கடந்த 6-ந்தேதி தனக்கு சொந்தமான நிலத்தின் ஆவணம் தொடர்பான விசாரணைக்கு சென்றபோது ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலருக்கும் கோபால்சாமிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதனிடையே கிராம உதவியாளர் முத்துச்சாமி, கோபாலசாமி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானது. இதனையடுத்து கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    அதன் பின்னர் இரு தினங்களில் மற்றொரு வீடியோவில் கிராம உதவியாளர் முத்துச்சாமி கோபால்சாமியை ஆபாசமாக பேசி தாக்கும் வீடியோ வெளியான நிலையில் உண்மைத் தகவலை மறைத்த கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்தநிலையில் கோபால்சாமி மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் மீது ஆபாசமாக பேசி தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதனிடையே இந்த விவகாரத்தில் கோபால்சாமி மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகியோரை கைது செய்து பணிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கட்சி சார்பற்ற களஞ்சியம் விவசாயிகள் சங்கம் சார்பாக திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

    இதில் விவசாய சங்கத்தினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். 
    Next Story
    ×