search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடந்த காட்சி.
    X
    தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடந்த காட்சி.

    திருப்பூரில் பலத்த மழை - தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது

    பொதுமக்களுக்கு உதவும் வகையில் பேரிடர் தணிப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 29-ந்தேதி மற்றும் நேற்று 30-ந்தேதி அதிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது. இதனால் திருப்பூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
     
    இதையடுத்து திருப்பூரில் ஜம்மனை, சங்கிலிப் பள்ளம், அமராவதி, நொய்யல் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது. கலெக்டர் வினீத பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார்.

    பொதுமக்களுக்கு உதவும் வகையில் பேரிடர் தணிப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தயார் நிலையில்  வைக்கப்பட்டனர். மழையால் பாதிப்பு ஏற்படும் நிலையில் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 1077 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. வரலாற்றில் முதல் முறையாக திருப்பூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் சற்று அதிர்ச்சியில் உறைந்தனர். 

    மழையால் பாதிப்பு அதிகம் இருக்குமோ? என்று மழையை எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தனர். ஆனால் கடந்த ஒரு வாரமாக திருப்பூர் மாவட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. அவ்வப்போது லேசான தூரலுடன் மழை பெய்தது. சில நேரங்களில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. ஆனால் பொதுமக்கள் எதிர்பார்த்தப்படி மழை பெய்யவில்லை. 

    இந்தநிலையில் இன்று மதியம் 2 மணியளவில் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. 

    இன்று காலை முதல் திருப்பூர் மாநகர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. உடல் வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் இளநீர் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை வாங்கி சாப்பிட்டனர். மதியத்திற்கு பிறகு பெய்த மழையால் மாநகரில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். 

    திருப்பூர் பல்லடம் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு இருந்தது. அதனை இன்று காலைதான் அதிகாரிகள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் மழை பெய்ததால் பல இடங்களில் சாலைகளில் அரிப்புகள் ஏற்பட்டன.  
    Next Story
    ×