search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த்
    X
    விஜயகாந்த்

    விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் பயணம்

    விஜயகாந்த் சில நாட்கள் துபாயிலேயே தங்கி சிகிச்சை பெறுகிறார். அவருடன் மகன் சண்முக பாண்டியன் மற்றும் உதவியாளர்கள் சென்றுள்ளனர்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தைராய்டு பிரச்சினை, தொண்டையில் தொற்று, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக அவரால் சரியாக நடக்க முடியவில்லை. பேச முடியாமலும் தவித்தார்.

    இதையடுத்து விஜயகாந்த் சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு அமெரிக்காவில் உள்ள ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றார்.

    அதன்பிறகு அவரது உடல் நலம் ஓரளவு தேறியது. ஆனாலும் அவரது உடல்நலம் பூரணமாக குணமாகவில்லை. இதையடுத்து சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு மாதம் ஒரு முறை சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்.

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற்று பிரசாரம் செய்வார் என்று அவரது மனைவி பிரேமலதா அறிவித்தார். ஆனால் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் விஜயகாந்தின் உடல்நிலை சரியாகவில்லை.

    தேர்தலுக்கு முன்பு கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் விஜயகாந்த் பங்கேற்றார். அப்போது அவர் பேச முடியாமல் தவித்தார். தொண்டர்கள் மத்தியில் தழுதழுத்த குரலிலேயே பேசினார்.

    தேர்தல் பிரசாரத்தின்போது அவர் தொண்டர்களை பார்த்து கையை மட்டுமே அசைத்தார். பிரசாரத்தின்போது அவரால் பேச முடியவில்லை. இதற்கிடையே விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதற்கும் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

    மார்ச் மாதம் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற பிறகு கடந்த 6 மாதமாக அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. முக்கிய பிரமுகர்களை சந்திப்பதையும் தவிர்த்தார். கடந்த 2 வாரத்துக்கு முன்பு விஜயகாந்த் மீண்டும் மியாட் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டார்.

    கடந்த 25-ந்தேதி விஜயகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி கடந்த 23-ந் தேதி அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘பிறந்தநாளின்போது தன்னை சந்தித்து வாழ்த்து சொல்ல தொண்டர்கள் யாரும் நேரில் வர வேண்டாம். நான் விரைவில் சிகிச்சைக்காக வெளிநாடு செல்வேன்’ என்று தகவல் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் விஜயகாந்த் தொண்டை தொற்று, நடைபயிற்சி உள்ளிட்ட சிகிச்சைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்றார். அவர் சில நாட்கள் துபாயிலேயே தங்கி சிகிச்சை பெறுகிறார். அவருடன் மகன் சண்முக பாண்டியன் மற்றும் உதவியாளர்கள் 2 பேரும் சென்றுள்ளனர்.

    தேமுதிக

    இதுதொடர்பாக தே.மு.தி.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    உடல்நலக்குறைவால் விஜயகாந்தால் தானாக எழுந்து நிற்க முடியாது. தொண்டையில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக அவரது பேசும் திறனும் குறைந்துள்ளது. இந்த இரண்டையும் சரி செய்வதற்காக அவர் சிகிச்சை பெற துபாய் புறப்பட்டு சென்றார்.

    லண்டனை சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவர் அவருக்கு நடைபயிற்சி மற்றும் பேச்சு பயிற்சி கொடுப்பதற்காக துபாய் வருகிறார். விஜயகாந்த் தானாக எழுந்து நிற்கவும், நடக்கவும், பேசவும் அவர் பயிற்சி அளிக்கிறார். தொண்டையில் ஏற்பட்டுள்ள தொற்றுக்கும் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்.

    இதற்காக அவர் சில நாட்கள் துபாயில் தங்கி இருப்பார். அவர் எத்தனை நாட்கள் தங்கி இருப்பார் என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும் துபாயிலேயே அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதா அல்லது அவர் சிகிச்சைக்காக லண்டன் அழைத்து செல்லப்படுவாரா என்பது பின்னர் முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×