search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    1-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: 95 சதவீத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது

    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவ- மாணவிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் பள்ளி-கல்லூரிகள் வருகிற 1-ந்தேதி முதல் திறக்கப்படுகிறது.

    இதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி -கல்லூரி ஊழியர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசிகளை 1-ந்தேதிக்குள் போட்டு முடித்து இருக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

    ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதற்கு ஏற்ப தடுப்பூசிகளை கூடுதலாக தமிழ்நாட்டுக்கு அனுப்புமாறு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொண்டது.

    அதன்பேரில் மத்திய அரசு தினமும் தமிழகத்துக்கு
    கொரோனா தடுப்பூசி
    களை அனுப்பியபடி உள்ளது. நேற்று 11.76 லட்சம் தடுப்பூசிகள் சென்னை கொண்டு வரப்பட்டன. இன்று சுமார் 5 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன.

    செப்டம்பர் 1-ந்தேதி கல்லூரிகள் திறக்கப்படும் போது அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுதான் கல்லூரிக்கு வர வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்காக சென்னையில் உள்ள 112 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு வருகிற 1-ந்தேதி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

    தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதால் பெரும்பாலான ஆசிரியர்கள், மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர். நேற்றும் இன்றும் அதிகப்படியான மாணவர்கள், ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

    சென்னையில் மாநகராட்சி பள்ளிகள் 70 உள்ளன. அரசு பள்ளிகள் 34, அரசு உதவி பெறும் பள்ளிகள் 172, தனியார் (மெட்ரிக்) பள்ளிகள் 279, சி.பி.எஸ்.சி. பள்ளிகள் 97 உள்ளன. இந்த பள்ளிகளில் சுமார் 3 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்களில் 95 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதாக சென்னை மாவட்ட கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்தார்.

    சென்னையில் 5 சதவீத ஆசிரியர்களே இன்னமும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். அலர்ஜி, உடல்நல பிரச்சனை, கொரோனா தாக்கம் காரணமாக அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

    அத்தகைய ஆசிரியர்கள் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் உரிய மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. எல்லா மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் மருத்துவ சான்றிதழை கண்டிப்பாக காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் வகுப்புகள் நடத்தப்படும். 9 மற்றும் பிளஸ்-1 மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும்.

    ஆன்லைன் வகுப்பு (கோப்புப்படம்)

    தனியார் பள்ளிகளை பொறுத்தவரை வகுப்புகளை உரிய வழிகாட்டுதல்களின் பேரில் நடத்த வேண்டும். மாணவர்கள் நேரடி வகுப்புக்கு வர விருப்பம் தெரிவிக்காவிட்டால் அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடர்ந்து நடத்தலாம்.

    பள்ளி-கல்லூரிகளை திறப்பதற்கு இன்னும் 2 நாட்களே அவகாசம் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளை கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பங்கு பெறுபவர்களை அழைத்து பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் நடத்தப்படுகின்றன.

    மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு அனைத்து வசதிகளையும் உரிய முறையில் செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பள்ளி தலைமை ஆசிரியர் தேவைக்கேற்ப மாணவர்களுக்கு பஸ் பாஸ் பெறுவதற்கு உரிய விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள் மிகக்குறுகிய காலங்களில் மட்டுமே நடத்தும் அவகாசம் இருப்பதால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அந்த பாடத்திட்டங்களை ஆசிரியர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் எவை எவை என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களுக்கு படிப்பு சுமை ஏற்படாது என்ற நிலையை உறுதிப்படுத்த பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. முதல் 45 நாட்களுக்கு இணைப்பு பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவ- மாணவிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக மாணவ-மாணவிகள் சுகாதார முறையில் பள்ளிகளில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வைரஸ் தாக்கத்தை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வகையிலும் மாணவ- மாணவிகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை மூலம் சத்து மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட உள்ளன.


    Next Story
    ×