search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- வானிலை ஆய்வு மையம் தகவல்

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.

    இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

    நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.

    மழை

    30-ந் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    31, 1 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஒருசில மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாவதன் காரணமாக மத்திய மேற்கு வங்கக் கடல், அதனையொட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×